சனி, 26 டிசம்பர், 2009

குழந்தைக்கு சுதந்திரம் கொடுங்கள்


குழந்தைகளுக்கு உதவுகிறோம் பேர்வழி என்று சில பெற்றோரும், ஆசிரியர்களும் அவர்கள் விஷயங்களில் சதா தலையிட்டு கொண்டே இருப்பார்கள். அது தவறு. தேவையற்ற விஷயங்களில் அப்படிச் செய்வது குழந்தைகளின் மனங்களுக்குள் மறைந்திருக்கும் சக்தியை வெளிப்படுத்த தடையாக அமையும். அதுமட்டுல்ல அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி, மனதில் ஆழமான பாதிப்பையும் உண்டாக்கும். 

அது அந்தக் குழந்தையின் எதிர்காலத்தையும், வாழ்க்கையையும் பாதிக்கும். நம் குழந்தையின் வாழ்க்கைக்கு நாமே எதிரியாக இருக்கலாமா-? நம் குழந்தை தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

உண்மையில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தையிடம் அன்பு காட்டுங்கள். அதற்கு உணவூட்டுங்கள். ஆனால் அது விரும்பியதைச் செய்யட்டும் என்று விட்டு விடுங்கள். அது போக விரும்புகிற  இடத்துக்குப் போகட்டும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தையின் பாதையை அபாயமற்றதாகப் பத்திரத்தன்மை உள்ளதாகச் செய்விப்பதுதான்.

வாழ்க்கை ஒவ்வொரு சுற்றுக்கும் ஏழு ஆண்டுகள் என்கிற உண்மையான கபடமற்ற பருவம். அந்தக் கால கட்டத்தில் மாசு படிய விட்டால் அது வாழ்க்கை முழுவதையுமே குழப்பமாக்கி விடும். நீங்கள் உண்மையிலேயே உங்கள் குழந்தையை நேசிப்பவராயின் அதனுடைய முதல் ஏழாண்டு கால வாழ்க்கையில் எந்த கட்டுத்திட்டமும் செய்யாது விடுங்கள்.

குழந்தையை உருவாக்க விரும்புகிற யாரும் அதனிடம் பரிவாக நடந்து கொள்வதில்லை. மாறாகத் துன்புறுத்தவே செய்கிறார்கள். உலகின் அதிசயங்களை எண்ணி வியக்கிறது குழந்தை. பலவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆசையில் கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் பெற்றோருக்கோ அந்தக் கேள்விகள் எரிச்சலூட்டுவதாய் இருக்கிறது. தங்கள் கைவசம் உள்ள பதில்களைச் சொல்லி வைக்கிறார்கள். குழந்தை அந்த பதிலில் திருப்தி அடைகிறதா என்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. எனவே உண்மையான பதிலை குழந்தை புரிந்து கொள்ளும்படி விளக்கிச் சொல்லுங்கள்.

ஏழு வயது வரை ஒரு குழந்தை கபடமற்றதாய் வளர்க்கப் படுமாயின் அடுத்தவரின் எண்ணங்களால் அசுத்தப்படாமல் இருக்குமாயின் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் குழந்தையைத் தங்களுடைய ஆளுகைக்கு உட்படுத்தி விடுகிறார்கள்.

உங்கள் குழந்தையை நீங்கள் காப்பற்ற வேண்டியது வேறு யாரிடமிருந்தோ அல்ல. உங்களிடமிருந்துதான். பிள்ளைகள் மீது எந்த சக்திக்கும் அதிகாரம் இருக்கக்கூடாது. குறிப்பாக அவர்களின் முதல் ஏழாண்டு கால வாழ்க்கையில், அந்தக் கால கட்டத்தில் எவ்விதத் தலையீடும் இல்லாமல் இருந்தால் அவர்கள் நன்கு காலூன்றி விடுவார்கள். இப்படி வளர்க்கப்படும் பட்சத்தில் உங்கள் குழந்தைக்கு உங்கள் அச்சமோ கோழைத்தனமோ தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் குறைவு.

முதல் ஏழு ஆண்டுகளும் நேர்மையான வளர்ச்சி பெற்ற குழந்தையின் வலிமை அசாதாரணமானது. அந்த வலிமை வயது வந்தவர்களிடம் கூட காண முடியாது.

உங்கள் பெற்றோர் வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு உதவிக் கொண்டே இருந்திருக்கலாம். அதனால் நீங்கள் வளர்ந்த விதத்திலேயே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க நினைக்காதீர்கள்.

உங்கள் குழந்தை பின்னாளில் என்னவாக வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதனுள் மறைந்திருக்கும் சக்தி இன்னதென்று உங்களால் ஆரம்பத்தில் அத்தனை தீர்க்கமாக அடையாளம் காண முடியாது. அதை அடையாளம் தெரிந்து கொள்ள உங்கள் குழந்தைகளின் அடிப்படை சுதந்திரங்களில் தலையீடாதீர்கள்.

குழந்தைக்கு உங்கள் பயத்தையோ, விருப்பு  வெறுப்புகளையோ, கற்றுக் கொடுக்காதீர்கள். அவை கூட ஒரு விதத்தில் தலையீகள் தான்.

இப்படிப்பட்ட எந்த குறுக்கீடும் தலையீடும் இல்லாத குழந்தைகளால் தான் எதிர்காலத்தில் சாதனை சிகரத்தை தொட முடியும் என்பதையும் நன்கு நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

 


1 கருத்து:

கிரி சொன்னது…

நல்லா இருக்குங்க!