"தே மதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' என்று ஆர்ப்பரித்தார் மகாகவி பாரதியார். ஆனால் எந்த நாட்டின் சுதந்திரத்துக்காகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டாரோ, அந்த நாட்டின் நாடாளுமன்றத்திலேயே அவர்தம் தாய்மொழியான தமிழ்மொழி ஓங்கி ஒலிக்கப்போவதில்லை என்பதை அவர் எண்ணியிருக்க மாட்டார்.
தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல், "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூல்வழியே 1856-ம் ஆண்டு உலகுக்குத் தெரிவித்து சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அரசு தமிழைச் செம்மொழி என்று அறிவித்தது. தமிழைச் செம்மொழியாக அறிவித்ததே, செம்மொழிக்கான தகுதிகளைத் தளர்த்தி வேறுசில மொழிகளையும் செம்மொழியாக அறிவிப்பதன் பொருட்டே என்பதும் பிறகுதான் விளங்கியது.
இது ஒருபுறம் இருக்க, தகுதி மிகுதியால் செம்மொழி என்னும் பெருமை பெற்ற தமிழ்மொழியில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகின்ற செய்தி ஊடகங்களில் அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் தமிழில் பேசுவதற்குத் தடையாக இருப்பது என்ன அல்லது யார் என்பது பலருக்கும் பெரும் புதிராகவே உள்ளது. மத்திய அமைச்சர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறதென்றால், அமைச்சர்கள் அல்லாத மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியிலும் ஆங்கிலத்திலும் பிறர் பேசுவதைப்போல் எப்போதும் எதிலும் தமிழில் பேச அனுமதிக்கப்படுகிறார்களா என்றால், இல்லை என்பதை நம்புவதற்கே பலர் தயங்குவார்கள்.
அவையில் ஒருவர் இந்தியில் பேசினால் அது ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் பேசினால் அது இந்தியிலும் உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்பு வசதி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் கோரிக்கையால் 1964-ம் ஆண்டு முதல் செய்துதரப்பட்டு வருகிறது. தமிழில் பேசுவதற்கு மத்திய அமைச்சருக்கு அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதற்குமுன், நாடாளுமன்றத்தில் எந்தெந்த மொழிகளில் பேசலாம் என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 120-வது பிரிவு இவ்வாறு குறிப்பிடுகிறது: ""நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்படும். ஒரு உறுப்பினரால் தம் கருத்தை இந்தி அல்லது ஆங்கிலத்தில் வெளிப்படுத்த இயலாது என்றால், மாநிலங்களவைத் தலைவர் அல்லது மக்களவைத் தலைவர் அல்லது அந்தந்த அவையை நடத்துபவர் அந்த உறுப்பினரைத் தம்முடைய தாய்மொழியில் பேச அனுமதிக்கலாம்.''
ஆனால் நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன? இந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் யாரும் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். தமிழிலோ அல்லது பிராந்திய மொழிகள் என்று அழைக்கப்படும் வேறு மாநில மொழிகளிலோ ஓர் உறுப்பினர் பேச வேண்டும் என்றால், அவர் பேசுவதற்குக் கொடுக்கப்படும் வாய்ப்பைவிட, அவருக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அவர் தமிழில் பேசாமல் இருப்பதே மேல் என்று எண்ணி ஒதுங்கிவிடச் செய்கிறது.
ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதிகளைப் பட்டியலிடுகின்ற அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 84 அல்லது நாடாளுமன்றத்தில் எந்தெந்த மொழிகளில் பேசலாம் என்பதைக் குறிப்பிடும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 120 அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை மற்றும் அவர்களின் தகுதிகள் பற்றி விலாவாரியாகக் குறிப்பிடும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 ஆகியவற்றில் எதுவும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் உள்ளிட்ட தம் தாய்மொழியில் பேசுவதைத் தடை செய்யவில்லை.
அவர்களுக்கு ஆங்கிலம் அல்லது இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறவில்லை. இவ்வாறிருக்க, அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மத்திய அமைச்சர்கள் தமிழில் பேசமுடியாது என்று கூறுகிற, அரசியல் சட்டத்தை விஞ்சுகிற அதிகாரம் யாருக்கு இருக்கிறது? நிச்சயமாக எவருக்கும் இல்லை. இந்த ஜனநாயக ரீதியான மொழி உரிமை மறுக்கப்படுவதற்கான முக்கியமான காரணம், இந்திக்குத் தரப்படும் அதே உரிமையை பிராந்திய மொழிகளுக்கும் தருவதா என்னும் மனப்பாங்கைத் தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்?
ஒரு மத்திய அமைச்சர் தாம் தமிழில் பேசவிரும்புவதாக நாடாளுமன்றச் செயலகத்துக்குத் தெரிவித்தது பாராட்டத்தக்க ஒரு முன்னோடியான செயல். த மிழகத்தைச் சேர்ந்த பிற அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தங்கள் கருத்தை முன் ஆயத்தமின்றி ஆங்கிலத்தில் வெளிப்படுத்தும் அளவுக்கு ஆங்கிலப் புலமை பெற்றவர்களா என்ற கேள்வி எழுவதும் இயற்கைதான். ÷த மிழர்கள் சம உரிமையின்றி வாழ்ந்துவரும் இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடாளுமன்றங்களில்கூட தமிழில் தடையின்றிப் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது. தமிழில் பேசவும் பிற மொழிகளில் பேசப்படுவதை மொழிபெயர்ப்புமூலம் தமிழில் கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் முன்னறிவிப்பு செய்துவிட்டு ஒரு எம்.பி. தமிழில் பேசலாமே தவிர, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசும்போது அதைத் தமிழில் மொழிபெயர்ப்பு மூலம் அவரால் கேட்கமுடியாது, அந்த வசதி இங்கு செய்துதரப்படவில்லை.
ஆங் கிலப் புலமை இல்லாததால் தமிழில் பேசும் ஒருவர், ஆங்கிலம் அல்லது இந்தியில் நடைபெறும் அவை நடவடிக்கைகளை தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமல் எவ்வாறு புரிந்துகொள்வார்? இரண்டாந்தரக் குடிமக்களாகத் தமிழர்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் நாடுகளின் நாடாளுமன்றங்களில் தமிழில் பேசுவதற்கும் பிறர் பேசுவதைத் தமிழில் கேட்பதற்கும் கொடுக்கப்படும் உரிமை, இந்திய நாடாளுமன்றத்தில் கொடுக்கப்படவில்லை என்பதை எண்ணும்போது யார் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற கேள்வி ஈட்டியாய் நெஞ்சில் குத்துகிறது. 27 நாடுகள் அங்கம் வகிக்கின்ற, 736 எம்.பி.க்களைக்கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பின் நாடாளுமன்றத்தில் 23 மொழிகளில் உடனடி மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இதற்காக 800-க்கும் அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது வியப்புமேலிடும் உண்மை.
ஆனால் காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கும் இத்திருநாட்டில் சொந்தமொழியே அன்னியப்பட்டுக் கிடக்கும் அவலத்திலும் சலனமில்லாமல் இருப்பதுதான் தமிழனின் தனிப்பண்புபோலும். சொந்த நாட்டின் நாடாளுமன்றத்திலேயே மதிக்கப்படாத ஒரு மொழி செம்மொழியாய் இருந்து யாருக்கு என்ன பயன்? யாருடைய தயவும் இன்றி நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் சூழல் உருவாக வேண்டுமெனில், அரசியமைப்புச் சட்டத்தின் 120-வது பிரிவைத் திருத்துவது அவசரமானதும் அவசியமானதும்கூட.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்படும் என்ற வாசகத்தை நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கிலம் அல்லது தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மேற்கொள்ளப்படும் என்று மாற்றியமைக்கின்ற அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் கொடுக்கப்படும் நாடாளுமன்ற கெüரவம் செம்மொழி தமிழுக்கும் கிடைக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சார்ந்த இரு அவைகளின் எம்.பி.க்கள் 59 பேரும், அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முயற்சிப்பார்களா? அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட இந்த ஆண்டில், அவருடைய முய ற்சியால் கொண்டுவரப்பட்ட நாடாளுமன்ற மொழிபெயர்ப்பு சேவை முழுவீச்சில் செம்மொழி தமிழுக்குக் கிடைக்கச் செய்வதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்
கட்டுரை : தில்லை நாகசாமி
.(கட்டுரையாளர்: மாநிலங்களவையில் முதுநிலை மொழிபெயர்ப்பாளராக 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்).
1 கருத்து:
Tamils shd boycott Indian parliament until they change rules!
Otherwise they shd give more power to states!Tamils shd stop paying high taxes to central govt!They shd organise "PANDAMATRU MURAI" COOP SYSTEM AND BOYCOTT ECONOMY!
TELUNGANA SHD GET OWN STATE! ALL STATES SHD GET MOST AUTONOMY!WE SHD NOT ALLOW COLONIAL SLAVERY MENTALITY TO CONTINUE IN POLITICS,POLICE,BUREAUCRACY,EDUCATION AND ECONOMY! WE CAN HELP 75% OF POOR WHO LIVE UNDER 20.-RS PR DAY! IF CENTRAL GOVT STOP SUCKING BLOOD FROM POOR STATES!
கருத்துரையிடுக