சென்னை, அக். 26-
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள இந்துகுருபேட்டா என்ற இடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் நெல்லூர் பகுதியை சேர்ந்த 26 பேர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
இவர்களில் 15 பேரின் கண்கள் பாதிக்கப்பட்டு பார்வை பறிபோனது. அவர்களில் சுப்பம்மா, கோபால் ரெட்டி ஆகியோர் உள்பட 10 பேர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண் பார்வை பறிபோன 10 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிரமாக கண்காணித்தபடி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் கண்ணீர் மல்க காத்து கிடக்கிறார்கள்.
இவர்களில் கோபால் ரெட்டி என்பவரின் கண்களை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளதாக அவரது மகள் திவ்யா கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விவசாய வேலை செய்து வந்த எனது தந்தைக்கு கண் பார்வை சரியாக தெரியாமல் இருந்தது. இதையடுத்து போலி நெனி அறக்கட்டளை ஆஸ்பத்திரி சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் அவர் கலந்து கொண்டார்.
கடந்த 18-ந்தேதி அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து திரும்பிய மறுநாளில் இருந்து அவரது கண்களில் நீர் வடியத்தொடங்கியது. கண் வலிப்பதாக கூறினார். இதனால் பயந்து போன நாங்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது கண்களை பரிசோதித்தோம். அங்கிருந்த டாக்டர்கள் எனது தந்தையின் பார்வை பறிபோயுள்தாகவும் உடனடியாக ஆபரேசன் செய்து கண்களை அகற்றாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று கூறினார்கள்.
இதையடுத்து சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தோம். சங்கர நேத்ராலயா ஆஸ்பத்திரி டாக்டர்கள் எனது தந்தைக்கு தீவிரசிகிச்சை அளித்தனர். இன்று காலையில் அவரை பரிசோதித்த பின்னர் பாதிக்கப்பட்ட கண்ணை அகற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர் இல்லையென்றால் மூளை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆந்திர டாக்டர்களின் தவறான ஆபரேஷனாலேயே எனது தந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் மீதும் டாக்டர்கள் மீதும் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கண் பார்வை பாதிக்கப்பட்ட சுப்பம்மா என்பவரின் மகன் சுரேஷ் கூறியதாவது:-
எனது தாய்க்கு டாக்டர்கள் தவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இன்று காலையில் அவர் தலைவலி அதிகமாக இருப்பதாக கூறினார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண் பார்வை பாதிக்கப்பட்ட 10 பேரும் சிகிச்சை பெற்று வரும் நுங்கம்பாக்கம் சங்கரநேத்ராலயா ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான பத்திரிகை மற்றும் டி.வி, கேமராமேன்கள் இன்று காலை குவிந்தனர். இதனால் ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று மாலையில் சிகிச்சை பெறுபவர்கள் பற்றிய முழு விவரங்களை வெளியிடுவதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக