ஞாயிறு, 11 அக்டோபர், 2009

கொலை செய்வதற்கும் 'அவுட் சோர்சிங்

கொலை செய்வதற்கும் 'அவுட் சோர்சிங்'*பி.பி.சி., திடுக்கிடும் தகவல்

அக்டோபர் 11,2009,00:00 IST

லண்டன்:கொலை செய்வதற்கும் கூட இப்போது "அவுட் சோர்சிங்' செய்ய ஆரம்பித்துள் ளனர் என்ற திடுக்கிடும் தகவலை பி.பி.சி., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.



பஞ்சாபிலிருந்து, பல ஆண்டுக்கு முன்பே, பிரிட்டனில் சில இந்தியர்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்காற்றியிருப்பதோடு, இப்போது நல்ல செல்வ வளத்துடனும் இருக்கின்றனர்."இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்களான இவர்களில், ஆண்டுதோறும் 100 பேர் காணாமல் போய்விடுகின்றனர்.



காணாமல் போனவர்களில் சிலர் பஞ்சாபில் கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது,' என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.இது குறித்து பி.பி.சி., தரப்பில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு இன்னும் தொடர்கிறது.



ஆய்வு அறிக்கையில் பி.பி.சி., கூறியிருப்பதாவது;கொலை செய்வதற்காக "அவுட் சோர்சிங்' (கான்ட்ராக்ட் போல ) செய்வது இப்போது உலகளாவிய அளவில் வளர்ந்து வருகிறது. இதற்கு "சுபாரி' என்று பெயர். இந்த சுபாரி முறையில் ஆண்டுதோறும் இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் குடிமக்கள் 100 பேர் காணாமல் போய்விடுகின்றனர். பெரும்பான்மை யும் இவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தான் கொலை செய்யப்படுகின்றனர். இதற்கான திட்டம் இங்கிலாந்தில் தயாராகிப் பஞ்சாபில் செயல்படுத்தப்படுகிறது.



குடும்பப் பிரச்னை, தொழில் ரீதியான போட்டிகள் இந்தக் கொலைகளுக்கு காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.இங்கிலாந்திலிருந்து பஞ்சாபுக்கு பிரிட்டிஷ் குடிமக்கள் வரும் போது, அவர்களைக் கொலை செய்வதற்காக பஞ்சாபிலுள்ள கூலிக் கொலைகாரர்களுக்கு ஒரு கொலைக்கு 40 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது.



பஞ்சாப் மாநில போலீசின் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் இந்தக் கொலைகள் பற்றிய ஆதாரங்கள் சரிவர கிடைக்கவில்லை. கொலையாளிகள் பஞ்சாப் போலீசுக்கு லஞ்சம் கொடுத்து தப்பிவிடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது . ஆனால், பஞ்சாப் போலீஸ் இதை மறுத்துள்ளது.



இது குறித்து ஸ்காட்லாண்டு யார்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை ஆறு பேர் இந்தியாவில் காணாமல் போயிருப்பதாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார், இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: