தீபாவளியை குடிமகன்கள் தமிழகம் முழுவதும் குதூகலமாகவே கொண்டாடியுள்ளனர். டாஸ்மாக் சரக்குகள் மூன்று நாட்களில் முற்றிலும் விற்றுத் தீர்ந்துள்ளன. இலக்கையும் தாண்டி, சரக்கு விற்பனை 220 கோடி ரூபாயையும் தாண்டி சக்கை போடுபோட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 732 டாஸ்மாக் கடைகள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 7,432 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையின் போது மது விற்பனையை அதிகப்படுத்தும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் பணிகளை முடுக்கிவிட்டது. தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விற்பனையை இரட்டிப்பாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மது வகைகள் இல்லை என குடிமகன்கள் திரும்பாத வகையில், ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது ஐந்து லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் இருப்பு வைத்துக் கொள்ள கடை சூப்பர்வைசர்கள் மற்றும் ஏரிய சூப்பர்வைசர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்களிடமிருந்து தேவையான சரக்குகளுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டு, சப்ளை செய்யப்பட்டது. குடிமகன்கள் விரும்பும் சரக்குகள் எவை என ஏரியா வாரியாகவும், கடை வாரியாகவும் லிஸ்ட் எடுக்கப்பட்டு, அதற்கு ஏற்பவும், சரக்குகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.
மதுபானங்கள் அதிகம் விற்கப்படும் சென்னை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களுக்கு வழக்கமான சரக்கு சப்ளையுடன் மும்மடங்கு சரக்குகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறது. கடந்த ஆண்டு சாதாரண நாட்களில் அயல்நாட்டு மதுவகைகள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெட்டிகள், பீர் வகைகள் 60 ஆயிரம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டன.இந்த ஆண்டு சாதாரண நாட்களில் அயல்நாட்டு மதுவகைகள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பெட்டிகளும், பீர் வகைகளில் 80 ஆயிரம் பெட்டிகளும் விற்கப்பட்டன. சாதாரண நாட்களில் 50 கோடி முதல் 70 கோடி சரக்குகள் கொண்ட பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன.டாஸ்மாக் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விற்பனையும் தமிழகம் முழுவதும் கனஜோராகவே நடந்துள்ளது. தீபாவளியன்று மட்டுமல்ல, நேற்றும் டாஸ்மாக் கடைகள் நிரம்பி வழிந்தன. குடிமகன்களின் கூட்டத்தால் பார்களும் களை கட்டின. கடந்த ஆண்டை விட சரக்கு விற்பனை இரண்டு நாட்களில் 100 சதவீதத்தையும் தாண்டிவிட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 100 கோடி ரூபாய் வரை மதுவகைகள் விற்பனையாயின. இந்த ஆண்டு, தீபாவளியை அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆண்டை விட விற்பனை 100 சதவீதத்தை தாண்டியுள்ளது. மொத்தத்தில் 220 கோடி ரூபாய்க்கு மேல் சரக்குகள் விற்று தீர்ந்துள்ளன. என்றாலும் அதுபற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அனைத்து மட்டத்திலிருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக