ஞாயிறு, 25 அக்டோபர், 2009

தி.மு.க., - காங்., கூட்டணியில் விரிசல்


இணக்கமான' கூட்டணியாக பெரிதும் கருதப்பட்ட தி.மு.க., - காங்கிரஸ் அணியில், விரிசல் பெரிதாகிக் கொண்டே வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக் கிறதா, பலவீனமாக இருக்கிறதா என்ற கேள்வி, இந்தக் கூட்டணியின் பலத்தைப் பற்றிய சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்கிறது.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில் ஆரம்பித்தது தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்தது தி.மு.க., முதல் இரண்டு ஆண்டுகள், இக்கூட்டணியில் பெரிய விரிசல் இல்லை. தமிழகம், புதுவையில் 40க்கு 40 எம்.பி., தொகுதியையும் தி.மு.க., கூட்டணி வென்று காட்டியதால், மத்தியில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் செல்வாக்கு, கொடி கட்டிப் பறந்தது. அப்போது, தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி இருந்தாலும், மத்திய அரசின் ஆ(ட்)சியோடு, தி.மு.க., தனி ராஜாங்கமே நடத்தியது. 2006ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தான், கூட்டணியில் விரிசலுக்கான விதை, முளைவிட்டது.



அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், தனிப் பெரும்பான்மை இல்லாமல் தி.மு.க., ஆட்சி அமைத்தது. "ஆட்சியில் பங்கு வேண்டும்' என்ற கோஷத்தை காங்கிரசார் உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்தனர்.இந்த கோஷம் அவ்வப்போது எழுவதும், அடங்குவதுமாகவே இருந்தது. திருச்சியில் நடந்த தி.மு.க., மாநாட்டில் பேசிய, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மேடையிலேயே அந்த கோரிக்கையை வைத்தது, முதல்வர் கருணாநிதியை கோபமடையச் செய்தது."அதை நானும் சோனியாவும் தான் முடிவு செய்ய வேண்டும்; ஆட்சியில் பங்கு பற்றி பேசுவதானால், புதுவை நிலைமை பற்றியும் பேச வேண்டியிருக்கும்' என எச்சரித்தார். அத்தோடு அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.



இடையில், தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்துவதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, அகில இந்திய பொதுச் செயலர் ராகுல், ஒரு நாள் கூட முதல்வரைச் சந்திக்காதது, பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. இருதரப்பும், அதுபற்றிய சமாளிப்புகளை அளித்தாலும், அரசியல் நோக்கர்கள் அதை, வழக்கமான விஷயமாகக் கருதவில்லை.இப்போது, தி.மு.க.,- காங்கிரஸ் உறவை உரசிப் பார்க்கும் வகையில், முல்லைப் பெரியாறு விவகாரம் எழுந்துள்ளது.



புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த, மத்திய சுற்றுச்சூழல் மற் றும் வனத்துறை அமைச் சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி அளித்து விட்டார்.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட் சென்ற தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் அதிர்ச்சியடைந்த தி.மு.க., வரும் 1ம் தேதி மதுரையில், முதல்வர் தலைமையில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்த உள்ளது. கவனிக்க வேண்டிய விஷயம், "மத்திய இணை அமைச் சர் ஒருவர் நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து' நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது தான்.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த இரவில் அறிவிக்கப்பட்டதால், கூட்டம் ஜெய்ராம் ரமேஷைக் குறிவைத்து தான் நடக்கிறது என்பதை அறிய அரசியல் ஞானம் அவசியமில்லை. ரமேஷ், காங்கிரசைச் சேர்ந்தவர்.



தற்போது ஆட்சியில் இல்லாவிட்டாலும், கேரளாவில் அக்கட்சிக்கு இன்னும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே, அந்த மாநிலத்துக்கு எதிரான செயல்பாட்டை, காங்கிரசைச் சேர்ந்த எந்த மத்திய அமைச்சரிடமும் எதிர்பார்க்க முடியாது.இந்நிலையில், "புதிய அணை கட்டுவதில் முழுமூச்சாய் இறங்கியுள்ள கேரளாவைக் கண்டிக்காமல், மத்திய அமைச்சர் மீது பழிபோடுவது ஏன்' என காங்கிரஸ் பிரமுகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். "சோனியாவிடம், ஈடு இணையில்லாத செல்வாக்கு கொண்ட முதல்வர், அணை ஆய்வுக்கான அனுமதி தருவதைத் தடுத்திருக்க முடியாதா' என்ற சந்தேகம், அவர்களுக்கு இருக்கிறது. ஆகக்கூடி, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க., அதே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவரைக் கண்டித்து, பொதுக்கூட்டம் நடத்த உள்ளது.



தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பாரதிய ஜனதாவுடன் அங்கம் வகித்தபோது, இதேபோல ஒரு நிலைப்பாட்டை எடுத்தது தி.மு.க.,ஆட்சியின் கடைசி கட்டத்தில், மத்திய பா.ஜ., அரசைக் கண்டித்து, சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தியது. அடுத்தடுத்த நிகழ்வுகளின் காரணமாக, கூட்டணியை விட்டே வெளியேறி, காங்கிரசோடு கை கோர்த்தது.அதே வரலாறு, தற்போது திரும்புவதாக, தி.மு.க., முன்னணி பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர். 2011ல் வரும் சட்டசபை பொதுத் தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்புகள் பற்றி காங்கிரசுக்கும், காங்கிரசின் பலம் பற்றி தி.மு.க.,வுக்கும் உள்ளூர பல சந்தேகங்கள் இருக்கின்றன.



முல்லைப் பெரியாறு விவகாரம், அந்த விரிசலை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. "மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்' என்ற வரியோடு முடிகிறது தி.மு.க., அறிக்கை. இந்த அறிவிப்புக்குப் பின், காங்கிரசின் நிலைப்பாடு, சமாதானத் தூது போன்றவை எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதைப் பொறுத்து, மற்ற விவரங்கள் இருக்கும் என்பது வெளிப்படை.விரிசல் அதிகரிக்குமா, பூசி மெழுகப்படுமா என்பது, நவம்பர் 1ம் தேதி தெரிந்துவிடும்.

கருத்துகள் இல்லை: