WD
5 லிட்டர் தண்ணீரை பெறுவதற்காக ஒருவாரம் உறக்கம் இல்லாமல் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. அடுத்த முகாம்களில் இருக்கும் சொந்த பந்தங்களை பார்க்க முடியவில்லை. கடத்தி கொண்டு போன எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
மஞ்சள் காமாலை, தோல் நோய் ஏராளமாக பரவுகிறது. கழிப்பிடங்கள் சுத்தமாக இல்லை. குழந்தைக்கு பால் கொடுக்க பால், பால் பவுடர் கிடைக்கவில்லை. மாற்று உடைக்கு வழியில்லாமல் அழுக்கு துணியையே அணிந்து வருகிறோம். அரிசி, பருப்பு மட்டும் தருகிறார்கள். காய்கறி, மசாலா சாமான் தருவதில்லை. பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்வதாக அம்மக்கள் கதறி அழுதனர்.
இந்த விவரங்களை எல்லாம் தொகுத்து இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவிடம் விளக்கி சொன்னோம். மழைக்காலத்திற்கு முன்னதாக அனைவரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அனைவரும் ஒரே குரலில் வற்புறுத்தினோம். அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம், மன்னார் பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் பேரை விடுவிப்பதாக ஒத்துக் கொண்டனர். உறவினர்கள் விண்ணப்பம் செய்த வகையில் 8 ஆயிரம் பேரையும், மொத்தம் 58 ஆயிரம் பேரை 2 வாரத்தில் அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்றி விட்டு மற்றவர்களையும் மீள் குடியமர்த்துவோம் என்று தெரிவித்தார்.
இலங்கைக்கு சென்று வந்தது ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. "எங்களை பார்க்க முதல் முறையாக இந்தியாவில் இருந்து வந்திருக்கிறீர்கள். இந்தியாவிடம் சொல்லி எங்களை சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்யுங்கள்'' என்று அவர்கள் கதறி அழுதனர். முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை வெளியேற அனுமதித்தது, எங்களுடைய பயணத்தால் கிடைத்த பயன் என்று கருதுகிறேன். மற்றவர்களையும் விடுவிக்கும் முயற்சியை இந்திய அரசு மூலமாக முதலமைச்சர் கருணாநிதி மேற்கொள்வார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு இலங்கை சிறையில் அடைபட்ட 40 இந்தியர்களை இந்தியாவில் உள்ள சிறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உறுதியளித்துள்ளது என்று திருமாவளவன் கூறினார்.
இலங்கை அதிபருடனான சந்திப்பின் போது, "இலங்கையில் நடந்த போரின் போது பிரபாகரனோடு நீங்கள் இருந்திருந்தால் அவரோடு சேர்ந்து மறைந்திருக்க கூடும். உங்களை நான் இப்போது சந்திக்க முடியாமல் போயிருக்கலாம்'' என்று ராஜபக்சே கூறியது குறித்து திருமாவளவனிடம் கேட்டதற்கு, "என்னை அறிமுகம் செய்த போது இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன்'' என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக