டாக்டர்களில் பலருக்கு மருந்து கடைகள், பரிசோதனைக் கூடங்கள், ஸ்கேன் சென்டர்கள் ஆகியவற்றுடன் நல்ல உறவு இருக்கிறது. அது பரஸ்பரம் பலனுள்ளது என்பது மக்களுக்கு தெரியும்.
மருந்து கம்பெனிகளுடன் டாக்டர்கள் வைத்திருக்கும் தொடர்பு பற்றி அத்தனை பரவலாக தெரியாது. அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவராகவும், அதிக விலையுள்ள மருந்து மாத்திரைகளை சிபாரிசு செய்பவராகவும் இருந்தால் அதிர்ஷ்டம் அழைப்பு மணி அடிக்கும்.
மாதத்தில் பாதி நாள் சர்வதேச மருத்துவ கருத்தரங்கம் என்ற பெயரில் உலகை சுற்றி பறக்கலாம். ஆடம்பர ஓட்டல்கள், உல்லாச விடுதிகளில் தங்கி அனுபவிக்கலாம். மொத்த செலவையும் மருந்து கம்பெனி ஏற்றுக் கொள்ளும்.
இதெல்லாம் வேண்டாம் என்பவர்கள் சொகுசு கார் போன்ற அன்பளிப்புகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கென கோடி கோடியாக செலவிட மருந்து கம்பெனிகள் தயங்குவதில்லை. எல்லாம் நோயாளிகள் மூலம் திரும்ப கிடைத்து விடுகிறது.
நோயை விரட்டுவதற்கு பதில் நோயாளியை நிரந்தர வாடிக்கையாளராக மாற்றுவது இந்த ஏற்பாடு. புனிதமானது என்று சொல்லப்படும் மருத்துவ தொழிலுக்கு பெரும் களங்கமாக விளங்கும் உறவு இது. இதற்கு முடிவு கட்ட இந்திய மருத்துவ கவுன்சில் முனைந்திருக்கிறது.
டாக்டர்களோ அவர்களின் குடும்பத்தினரோ மருந்து கம்பெனிகள் தரும் பரிசு, பணம், பயணம், ஓட்டல் செலவு, அன்பளிப்பு போன்ற எதையும் ஏற்கக்கூடாது என்று கவுன்சில் கடந்த வெள்ளியன்று அறிவித்திருக்கிறது. வரவேற்க வேண்டிய நடவடிக்கை.
இந்த அறிவிப்பை செயல்படுத்த முடியுமா என்பது பெரிய கேள்வி. ஏனென்றால், இவை வெறும் வழிகாட்டு நெறிகள். மீறினால் தண்டனை கிடைக்கக்கூடிய விதிகள் அல்ல. டாக்டர் தொழில் நடத்துவதற்கான லைசன்சை ரத்து செய்வோம் என்று கவுன்சில் எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.
தவறு செய்யும் டாக்டர்கள் யார் என்று கண்காணிப்பதற்கான ஏற்பாடும் இல்லை. கவுன்சில் மீதே புகார்கள் இருக்கின்றன. கட்டமைப்பு இல்லாமல், கருவிகள், வசதிகள், ஆசிரியர்கள் இல்லாமல் நாடெங்கும் மருத்துவ கல்லூரிகள் முளைத்துள்ளன.
கிளைகளை வெட்டுவதால் ஊழல் மரம் மறைந்துவிடாது. வேரில் விழ வேண்டும் கத்தி.
நல்ல டாக்டர்கள் நமக்கென்ன வந்தது என்று ஒதுங்கி நிற்காமல் ஒத்துழைத்தால் உயிரோடு விளையாடும் சூதாட்டம் ஒழியும்.
நல்ல டாக்டர்கள் நமக்கென்ன வந்தது என்று ஒதுங்கி நிற்காமல் ஒத்துழைத்தால் உயிரோடு விளையாடும் சூதாட்டம் ஒழியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக