விரைவில் உலகம் அழிந்துவிடுமா? அண்மைக்காலமாக மனித குலத்தின் ஆழ்மனத்தில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கேள்வி இது.
திருச்சியில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடம் ஒரு மாணவி இதைக் கேட்டார். ஒரு கணம் மௌனித்த அந்த விஞ்ஞானி, அப்புறம் இப்படி பதில் தந்தார்: ""இல்லை. பூமியில் 1000 கோடி ஆண்டுகள் சூரிய வெளிச்சம் இருக்கும் என்று விஞ்ஞானி சந்திரசேகர் தன் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்.
தற்போது 500 கோடி ஆண்டுகளே முடிவடைந்துள்ளன. இன்னும் 500 கோடி ஆண்டுகள் உள்ளன. ஆகையால், கவலைப்படத் தேவையில்லை.''அந்த மாணவி என்றில்லை; இயற்கையின் மீதும், சக மனிதர்கள் மீதும் எந்த அக்கறையும் இல்லாதவர்களையும்கூட இந்தக் கேள்வி பதற்றத்துக்குள்ளாக்குகிறது.
மாயர்களின் நாகரிகத்தில் தொடங்கி புவி வெப்பமயமாதல் கருதுகோள் வரை சகலமும் இந்தக் கேள்வியாளர்களின் மனத்தை கேள்வியை நோக்கித் தள்ளுகின்றன. பனிமலைகள் உருகுகின்றன; மலைகள் சரிகின்றன; கடல்மட்டம் உயர்கிறது; தீவுகள் மூழ்குகின்றன. உலகம் அழிந்துவிடுமா?
எப்படி இந்த உலகைக் காப்பது? தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்களை அணைத்தா? பாலிதீன் பைகளைத் தவிர்க்க கடைக்கு துணிப் பைகளை எடுத்துச் சென்றா? இனி,காருக்குப் பதில் பஸ்ஸிலேயே பயணம் மேற்கொண்டா?
உலகின் அத்தனைதொழிற்சாலைகளையும் செம்மையான தொழில்நுட்பத்தின் கீழ் மாற்றியா? எப்படி உலகைக் காப்பது? மனிதர்களின் பதற்றம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
உலகின் மிகப்பெரிய பாலைவனமாக இன்று காட்சியளிக்கும் சஹாரா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகள் நிறைந்த பசுமையான பகுதியாக இருந்தது. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.பின்னாளில், ஏதோ ஓர் அழிவு சக்தியில்-எரிகற்களின் மோதலில் அல்லது ஒரு கொடும் தீப்புயலில் நிலத்திலிருந்த யாவும் எரிந்தழிய பாலையானது சஹாரா. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.
யாரால், எதனால் ஏற்பட்டது அந்த தீப்புயல்? பல கோடி ஆண்டுகளாகக் கோள்கள் இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளாக புவியும் இருக்கிறது. மனிதனால் எதை மாற்ற முடியும்?
மனிதன் தீயை உருவாக்கக் கற்றுக்கொண்டபோதே அழிவு சக்தி உருவாகிவிட்டது. சக்கரத்தை அவன் கண்டறிந்தபோது அந்த அழிவு சக்தி நூறு கால்களையும் கொண்டது. ஆயுதங்களை அவன் கண்டுணர்ந்தபோது அழிக்க முடியாத சக்தியை அந்த அழிவு சக்தி பெற்றது. இந்தப் பயணம் நிலையானது. தவிர்க்க முடியாதது.
அடர் வனங்கள், லட்சக்கணக்கான தாவர இனங்கள், பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகள், பறவைகள், உயிரோட்டமிக்க நீர்நிலைகள், நீர்வாழ் உயிரினங்கள், ஒட்டுண்ணிகள், நுண்ணியிரிகள் யாவும் அழிந்துகொண்டிருக்கின்றன.
சிங்கங்கள், புலிகள், கானுறை வேங்கைகள், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள், ஓங்கில்கள்,சோலைப்பாடிகள், பிணந்தின்னிக்கழுகுகள் யாவும் அருகிக்கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் எப்படித் தப்ப முடியும்?
சீன ஞானி லா வோட்சு சொன்னதுபோல,""வானகமும் வையகமும் நிரந்தரமாக நீடிக்க முடியாதபோது மனிதன் எப்படி நீடிக்க முடியும்?''
புன்சிரிப்போடு பதில் சொல்லுங்கள்: உலகம் அழிந்துவிடுமா? அழிந்தால்தான் நாம் என்ன செய்யப்போகிறோம்?
வானகமும் வையகமும் அடர் வனங்களும் உயிரோட்டமிக்க நீர்நிலைகளும் பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகளும் பறவைகளும் நீர்வாழ் உயிரினங்களும் அழிந்துகொண்டிருக்க மனிதன் மட்டும் எப்படி நீடிக்க முடியும்?
சிங்கங்களும் புலிகளும் கானுறை வேங்கைகளும் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும் ஓங்கில்களும் சோலைப்பாடிகளும் பிணந்தின்னிக்கழுகுகளும் அழிந்த பின் மனிதன் மட்டும் ஏன் நீடிக்க வேண்டும்?
நன்றி :
தினமணி
3 கருத்துகள்:
அருமையான தகவல்கள்
நல்ல கருத்து ஆனால் நானும் 2012 என்ர திரைப்படம் பர்த்தேன் அதுலயும் உலகம் அழியும் என்பதை சொல்லி இருக்கர்கள் அதை பார்க்கும் பொது உலகம் அழிந்து விடுமோ என்ரு எண்ண தொன்ருது
கருத்துரையிடுக