செவ்வாய், 22 செப்டம்பர், 2009

'ஓசியானா-சபாஷ் இந்தியா

ஓசியானா'வுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.,
செப்டம்பர் 22,2009,00:00 IST

சென்னை : இந்திய கடல் ஆராய்ச்சிக்கான, "ஓசியானா' செயற்கைக்கோள் மற்றும் ஆறு குறு செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மிகவும் வெற்றிகரமான நம்பிக்கைக்குரிய ராக்கெட் பி.எஸ்.எல்.வி., 1993ம் ஆண்டு முதல் 15 முறை விண்ணில் செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், 14 முறை வெற்றிகரமாக செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது.



இதுவரை 32 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ள பி.எஸ்.எல்.வி., மூலம், நாளை பகல் 11 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளன. இந்தியாவின் பெருங்கடலைக் கண்காணிக்கும், "ஓசியானா-2' செயற்கைக்கோளுடன், ஆறு குறு செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்த, "பி.எஸ்.எல்.வி., சி-14' ராக்கெட் ஏவப்படுகிறது. "ஓசியானா' செயற்கைக்கோளுடன், "கியூப்சாட்' 1, 2, 3, 4 என நான்கு குறு செயற்கைக்கோள்களையும், "ரூபின் 9.1 மற்றும் 9.2' என இரு செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி., ஏந்திச் செல்லும். இந்த குறு செயற்கைக்கோள்கள் ஐரோப்பிய பல்கலைக் கழகங்களின் கல்வி ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்படுகின்றன.



"பி.எஸ்.எல்.வி., சி-14' ராக்கெட் 44.4 மீட்டர் உயரமும், புறப்படும் சமயத்தில் 230 டன் எடையும் கொண்டிருக்கும். நான்கு கட்டங்களாக இது விண்ணுக்குச் செல்லும். முதலில் ராக்கெட்டில் இருந்து "ஓசியானா-2' பிரிந்து சென்றதும், அடுத்த கட்டமாக நான்கு "கியூப்சாட்'களும் விண்வெளியில் நிலை நிறுத்தப்படும். கடைசி கட்டத்தில், "ரூபின்' செயற்கைக்கோள்கள் மட்டும் இத்துடன் நிலைத்து நிற்கும். பி.எஸ்.எல்.வி., இதுவரை விண்ணில் செலுத்திய 32 செயற்கைக்கோள்களில் 16 இந்தியாவின் செயற்கைக்கோள்கள்; மற்றவை வெளிநாடுகளுடையவை. இந்த ராக்கெட் பல செயற்கைக்கோள்களை ஒரே முறையில் கொண்டு சென்றுள்ளது. இதில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏவப்பட்ட, "பி.எஸ்.எல்.வி.,-9' மிக அதிகபட்சமாக 10 செயற்கைக்கோள்களை ஏந்திச் சென்று, விண்ணில் நிலைநிறுத்தியது.



விண்ணில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை நாளை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் இரவு, பகலாக உழைத்துக் கொண்டுள்ளனர். தொடர்ந்து வெற்றியை தந்து வந்துள்ள பி.எஸ்.எல்.வி., இம்முறையும் வெற்றியையே தரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட, துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, இன்று சென்னை வருகிறார்.



டில்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, ஸ்ரீஹரிகோட்டாவுக்கு 5.40 மணிக்கு சென்றடைகிறார். நாளை காலை 10 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவப்படும் வளாகத்துக்கு செல்கிறார். ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிட்ட பின், மாலை 4.50 மணிக்கு விமானப்படை விமானம் மூலம் டில்லி புறப்படுகிறார்.

கருத்துகள் இல்லை: