செவ்வாய், 22 செப்டம்பர், 2009

துரந்தோ எக்ஸ்பிரஸ்,

சென்னை - டில்லி பாயின்ட் டூ பாயின்ட் புது ரயில் அறிமுகம் : இடையில் நிற்காமல் 28 மணி நேரத்தில் செல்லும்
செப்டம்பர் 22,2009,00:00 IST

சென்னை : ""சென்னை சென்ட்ரல் - டில்லி ஹஸ்ரத் நிஜாமுதின் இடையே வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் துரந்தோ எக்ஸ்பிரஸ், விரைவில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும்,'' என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.





இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சென்னை சென்ட்ரல் - டில்லி இடையே, இடையில் நில்லா, "துரந்தோ' விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். "துரந்தோ' ரயில் போக்குவரத்தை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், மத்திய அமைச்சர் சிதம்பரம் நேற்று காலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.





துரந்தோ ரயிலின் சிறப்பம்சம் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் பேசியதாவது:"துரந்தோ' விரைவு ரயில் பெட்டிகள், ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்டுள்ளன. மற்ற ரயில் பெட்டிகளை விட 1.5 டன் எடை குறைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இப்பெட்டிகள் துருப்பிடிக்காது; தீ பாதுகாப்பு உள்ளது; பராமரிப்பு செலவும் குறைவு. பழைய பெட்டிகளை விட இரண்டு மீட்டர் நீளமாக இருப்பதால், அதிக இடவசதி கொண்டுள்ளது. "ஏசி' மூன்றடுக்கு பெட்டிகளில், 64 படுக்கைக்கு பதிலாக 72 படுக்கைகள் உள்ளன. இரண்டாம் வகுப்பு பெட்டியில், 72 படுக்கைகளுக்கு பதிலாக 78 படுக்கைகள் உள்ளன. "ஏசி' பெட்டிகளில் ஜன்னல்கள் பெரிய அளவில் உள்ளதால், பயணிகள் இயற்கை காட்சிகளை முழுமையாக ரசிக்கலாம். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு கருதி இப்பெட்டியில் நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் ஓடத் துவங்கி 30 கி.மீ., வேகத்தை அடைந்த பின்னரே கழிவறை கழிவுகள் வெளியே கொட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் நிலையங்கள் அசுத்தமாவது தவிர்க்கப்படும்.பயணிகளின் சொகுசான பயணத்திற்காக, இப்பெட்டிகளில் காயில் ஸ்பிரிங்குகளுக்கு பதிலாக ஏர் ஸ்பிரிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன.





வண்டி முழுவதும் பொது அறிவிப்பு சாதனங்களும் இணைக்கப்பட்டுள்ளன.பெட்டிகளின் வெளிப்புறம், எழில் மிகு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்கென தண்ணீர் பாட்டில்கள், பத்திரிகைகள் ஆகியவற்றை வைக்க வசதியும், உணவு அருந்த கண்ணாடியால் ஆன மேஜை வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி இரண்டாம் வகுப்பு பெட்டியிலும் செய்யப்பட்டுள்ளது. உணவு வசதிக்காக நவீன வசதிகள் கொண்ட, "பான்ட்ரி காரும்' இணைக்கப்பட்டுள்ளது.





பயணிகளுக்கு, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பிரத்யேக உணவு வகைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை - நிஜாமுதின் இடையேயான 2,177 கி.மீ., தூரத்தை இந்த ரயில், 27 மணி 55 நிமிடங்களில் சென்றடையும். பயணக் கட்டணம் ராஜதானி ரயிலை விட குறைவாகவே உள்ளது.துரந்தோ ரயில் 130 கி.மீ., வேத்தில் செல்லக்கூடியது. சென்னை - டில்லி பிரிவில் ரயில் தடங்களில் வேகம் அதிகரிக்கப்படும் போது, இந்த ரயிலின் வேகமும் கணிசமாக அதிகரிக்கப்படும். இதனால், பயண நேரம் மேலும் இரண்டு மணி நேரம் குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு ஜெயந்த் கூறினார்.





சாப்பாட்டுடன் சேர்த்து கட்டணம் :துரந்தோ ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திங்கள் கிழமை காலை 6.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.35 மணிக்கு டில்லி ஹஸ்ரத் நிஜாமுதின் சென்றடையும். ஹஸ்ரத் நிஜாமுதினிலிருந்து செவ்வாய்க் கிழமைகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.இந்த ரயிலில், சென்னையிலிருந்து, டில்லி ஹஸ்ரத் நிஜாமுதினுக்கு பயணம் செய்ய, "ஏசி' இரண்டாம் வகுப்பு கட்டணம் 2,530 ரூபாயும், "ஏசி' மூன்றாம் வகுப்பில் பயணம் செய்ய 1,925 ரூபாயும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய 760 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணம் செய்ய முடியும். பயணிகளுக்கு ரயிலிலேயே ரயில்வே சார்பில் காலை, மதியம், இரவு உணவு வழங்கப்படும். அதற்கு தனியாக கட்டணம் கிடையாது.

கருத்துகள் இல்லை: