இன்றைய அன்றாட வாழ்க்கையில் கம்ப்யூட்டர்கள் நம் பணியினைப் பங்கு கொண்டு, நம் நடவடிக்கைகளை எளிதாக்கி வருகின்றன. இதனால் அவற்றுடனே நம் முழுப்பொழுதும் செலவழிகிறது. அலுவலகம் ஒன்றின் சொகுசுப் பொருளாகக் கம்ப்யூட்டர் கருதப்பட்ட எண்ணம் மறைந்து, அடிப்படைச் சாதனமாக இது மாறிவிட்டது. எப்படி திருமணமான ஒருவர் தன் மனைவி அல்லது கணவனுடன் பல வழிகளில் அட்ஜஸ்ட் செய்து வாழப் பழகிக் கொள்கிறாரோ, அதே போல கம்ப்யூட்டர்கள், அவை அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஆகியவற்றுடனும் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லை என்றால் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது போல, நம் அன்றாட அலுவல் வாழ்க்கை மட்டுமின்றி, சொந்த நலனிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.
ஒரு நாளில் பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுகிறோம். பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில், சற்று சோர்வுடனே இருக்கிறோம். "உங்களுக்கென்ன ஏ.சி. அறையில் தானே வேலை பார்க்கிறீர்கள்' என்று மற்றவர்கள் சொன்னாலும், நம் உடம்பில் ஏற்படும் சோர்வும் வலியும் அதனால் தான் என்று என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா! உங்கள் மணிக்கட்டு வலியும், கண்களில் எரிச்சலும், முதுகில் எங்கோ சிறிய வலியும், இடுப்பிற்குக் கீழாக, உட்காரும்போதும் எழும்போதும் ஏற்பட்டு மறையும் தீவிரமான வலியும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால்தான் என்று உங்களுக்குத் தெரியுமா!
நாம் அமைத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் அலுவலகச் சூழ்நிலைகளே இதற்குக் காரணங்கள். இவற்றைக் கொஞ்சம் இங்கு கவனிக்கலாம்.
முதலில் நாம் பார்க்க வேண்டியது, எப்போதும் நாம் உற்றுப் பார்த்துப் பணி புரியும் கம்ப்யூட்டர் மானிட்டர் தான். அது அமைக்கப்படும் விதம் தான். ஒரு மானிட்டர், அது சி.ஆர்.டியாக இருந்தாலும், எல்சிடி ஆக இருந்தாலும், உங்கள் முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக உங்கள் தலையை சிறிது தூக்க வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன் ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல் புறத்தில் வலி உண்டாகும். இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும் நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர் திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ இருக்கலாம்.
ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால் அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில் இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக் கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில் எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை, பயன்படுத்தாததை நீக்கலாம்; அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம். ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல் உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் கலர் ஸ்கீம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப் பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி எழுத்துவகையினையும் உறுத்தாதவகையில் அமைக்கவும்.
மானிட்டரைப் பார்த்துவிட்டோம். இனி உங்கள் கைகளுக்குள் கம்ப்யூட்டருக்கான மந்திரக் கோலாகத் தவழும் மவுஸைப் பார்க்கலாம். எளிதில் அதனை அடைந்து கைகளுக்கு வலி எடுக்காவண்ணம் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உடம்பைச் சாய்க்காமல் அதனை சுழற்றிப் பயன்படுத்தும் வகையில் அருகே அதிக இடத்துடன் இருக்க வேண்டும். கீ போர்டு வைக்கப்பட்டிருக்கும் சிறிய இழுவை டிராவில் வைப்பதனை அறவே தவிர்க்கவும்.
மவுஸ் கையாளும் அதே அளவில், அல்லது அதற்கும் மேலாக நாம் கீ போர்டினைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கீ போர்டினைச் சரியாக அமைப்பது உங்கள் மணிக்கட்டு மற்றும் முழங்கை வலியை வரவிடாமல் தடுக்கும். கீ போர்டில் டைப் செய்கையில் உங்களுடைய மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும். முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் வளைந்திருக்க வேண்டும். இது உங்கள் நாற்காலியின் நிலையைச் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.
இவை எல்லாம் கம்ப்யூட்டருடன் இணைந்தவை. இவற்றை நீங்கள் எங்கிருந்து இயக்குகிறீர்கள். நிச்சயமாய் உங்கள் நாற்காலிகள் தான். பல ஆயிரம் அல்லது லட்சம் செலவழித்து கம்ப்யூட்டர்களை வாங்கி, அவற்றை ஏசி அறையில் வைத்திடும் அலுவலகங்கள், அதனை இயக்குபவர்கள் பழைய வகை நாற்காலியிலேயே அமரட்டும் என விட்டுவிடுவார்கள். அங்குதான் பிரச்சினையே தொடங்குகிறது. நீங்கள் அமரும் நாற்காலி எப்படி இருக்க வேண்டும்? உங்களுடைய பாதம் தரையில் நன்கு பதிந்திருக்கும் வகையில் நாற்காலி அமைக்கப்பட வேண்டும். இதனால் உங்கள் தொடைகளின் பின்புறத்தில் வலி ஏற்படாமல் இருக்கும். நாற்காலியின் குஷன் மிருதுவாக மட்டுமின்றி உறுதியாகவும் இருக்க வேண்டும். அமரும் சீட் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். சரியாக அமருவதற்காக முன்பக்கம் அல்லது பின்பக்கம் சாயக்கூடாது. நாற்காலி நன்றாக தரையில் அமர்ந்திட நான்கு அல்லது ஐந்து கால்களில் இருக்க வேண்டும்.
அடுத்ததாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை. ஒரேயடியாக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம் என இருவகைகளில் ஒளியூட்டப்பட்ட கம்ப்யூட்டர் அறைகளே இப்போது உள்ளன. எங்கு பாய்ண்ட் இருக்கிறதோ அங்கு மின்விளக்குகளை அமைத்துவிடுகின்றனர். இது தவறு. இருக்கின்ற விளக்கு ஒளி போதும் என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக்கூடாது. முடிந்தால் குழல் விளக்கு ஒளி இருக்க வேண்டும். விளக்கொளி உங்கள் தோள் மற்றும் தலைக்கு மேலாக இருக்க வேண்டும்; ஆனால் சரியாக உங்கள் பின்னாலிருந்து ஒளி வரக்கூடாது. உங்கள் மானிட்டர் திரைக்குப் பின்னாலிருந்து ஒளி வரும் வகையில் அமைக்கக்கூடாது. பொதுவாக நிலையாக அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை மாற்றுவது கடினம். எனவே மானிட்டரின் நிலையை மாற்றலாம். மானிட்டரை சிறிது இறக்கி ஏற்றலாம். அல்லது விளக்கு ஒளியை வடி கட்டி கிடைக்குமாறு ஷேட்களை அமைக்கலாம். ஒளியைப் படிப்படியாகக் குறைக்கும் டிம்மர் ஸ்விட்ச் கொண்டு ஒளியைத் தேவைப்படும் அளவிற்குக் குறைத்து அமைக்கலாம். நேரடியாக ஒளி கிடைக்காமல் மறைமுகமாகக் கிடைப்பது இன்னும் நன்றாக இருக்கும்.
பொதுவாக நம்மைப் பார்க்க வருபவர்கள் இல்லாமல், பக்கத்து சீட் நண்பர்களிடம் பேசாமல் பணியாற்ற கம்ப்யூட்டர் உதவுகிறது. இருப்பினும் பல கம்ப்யூட்டர் அறைகளில் தேவையற்ற சத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டருடன், அதன் புரோகிராமுடன் நாம் ஒரு சவாலுடன்தான் பணியாற்று வோம். அந்நிலையில் கூடுதலாகச் சத்தம் இருந்தால் நம் பணி ஒழுங்கு முறை கெட்டுவிடும். சரியான ஒலி நமக்கு பணியில் உற்சாகத்தைக் கொடுக்கும். சிறிய அளவில், மனதிற்கு அமைதி அளிக்கும் இசையை, அறையில் கசிய விடலாம். அல்லது அவை எதுவும் இல்லாமல், அமைதியைப் பேணலாம். இது அங்கு பணியாற்றுபவர்களின் விருப்பத்தைப் பொருத்து அமைக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
செலவு மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல அலுவலகங்களில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் மின்விசிறி மட்டும் கொண்டு சில கம்ப்யூட்டர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாப்ட்வேர் நிறுவனத்தில், செலவைக் குறைப்பதற்காக இன்றும் இரவில் ஏர் கண்டிஷனர் இயங்குவதை நிறுத்திவிடுவதாக என் நண்பர் ஒருவர் கூறினார். இது மோசமான ஒரு நிலையை அங்கு பணியாற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, மேற் கொள்ளப்படும் வேலைக்கும், அங்கு பயன் படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கும், அதில் கையாளப்படும் டேட்டாவிற்கும் உருவாக்கும். எனவே வெப்பம் மிகுதியான நம் ஊரில் கூடுமானவரை கம்ப்யூட்டர்கள் பயன்படும் இடத்தில் குறைந்த வெப்பம், அல்லது சற்று மிதமான குளிர் சீதோஷ்ண நிலை இருப்பது உகந்தது.
அதே நேரத்தில், அறைக்குள் வெளியிடப்படும் குளிர் காற்று நேரடியாகக் கம்ப்யூட்டர்கள் மீதோ, அல்லது அவற்றை இயக்குபவர் மீதோ படுவதனையும் தவிர்க்க வேண்டும். இறுதியாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், நீங்கள்தான். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். முதுகை வளைத்து மானிட்டரை உற்று நோக்கி உட்காராதீர்கள். சரியாக அமர்வது பின் முதுகு வலியைத் தவிர்ப்பது மட்டுமின்றி உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜனைச் சீராக அனுப்பும். வசதியான ஆடைகளை அணியுங்கள். உடம்பைப் பிடிக்கும் ஆடைகள் உங்கள் வேலைப் பண்பினை மாற்றி தொய்வை ஏற்படுத்தும். அதே போல உங்கள் செருப்பு மற்றும் ஷூக்கள் கால்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக நீங்கள் வேலை வேலை என்று அலைந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பவரா? அப்படியானால் சற்று சோம்பேறியாக இருப்பதில் தவறில்லை. இடை இடையே நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து சற்று உடம்பை வளைத்து நிமிர்த்தி அதனை உற்சாகப்படுத்துங்கள். இதனால் உங்கள் மூளைச் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உணர்ச்சிப் பாதிப்பு ஏற்படாது.
மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிலவற்றை நம்மால் மாற்ற முடியாது. மின்சார ட்ரெயினில் கூட்டத்தில் பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. சிறிது நேரமாவது பஸ் நிறுத்தத்தில் நிற்பதை மாற்ற முடியாது. பயணம் செய்கையில் அடுத்தவர் மூச்சு நம் தோள்களிலும் கழுத்திலும் படுவதை விரட்ட முடியாது. கண் தெரியாத பிச்சைக்காரர் டப்பா மைக் வைத்துக் கொண்டு கர்ண கடூரமாக பாடுவதைத் தடுக்க முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்கையில் முன் செல்லும் வாகனப் புகையை சுவாசிப்பதைத் தடுக்க முடியாது. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை விளக்குக்காய் சிக்னலில் காத்திருக்கும் சிக்கலை தவிர்த்திடவே முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் மேலே சொன்ன அனைத்து வழிகளையும் கடைப் பிடித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்வோமா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக