சனி, 23 அக்டோபர், 2010

ரசிக்கத் தெரிந்த மனமே ! உனக்கு ? பகுதி- 2


ரசிக்க தெரிந்த மனமே !உனக்கு ? பகுதி -1  படிக்க இங்கே  

என் நண்பர் ஒருவர் அழகான உடைகள் உடுத்துவார்,அவர் எது அணிந்தாலும் அவருக்கு அது பொருத்தமாகவே இருக்கும்.ஆனால் அவர் ஜீன்ஸ் அணிந்து நான் பார்த்ததே இல்லை. உலகமே அதை அணிகிறபோது அந்த ரசனை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று தோன்றும். ஒருமுறை அதை கேட்கவும் செய்தேன்." நான் ஒன்றும் சுரங்கத்தில் வேலை செய்யவில்லை" என்றார். 

என்னை எனக்கு எப்படிப் பிடித்து இருக்கிறதோ,அப்படி இருப்பதுதான் அழகு. அதுதான் ரசனை.நிறையப் பேர் எதைச் சரி என்கிறார்களோ,அதை பின் பற்றுவதுரசனை இல்லை. " நானும் இருக்கிறேன் ... என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துகொள்ளுங்கள் என்பதற்கான முயற்சி. 

நீங்கள் ரசிப்பதை இன்னொருவர் ரசிக்கவில்லை என்றால்,அது அவர் கோளாறு இல்லை. அவர் வேறொரு ரகமாக இருக்கலாம்.முடிந்தால் அவரின் ரசனையை நீங்களும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
நீரோடையின் அழகை ரசித்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு
நீரோடைக்கு அப்பால், அம்மாவின் மடியில் குழந்தை படுத்திருக்கும் அழகை ரசிப்பவரின் ரசனை அந்நியமாகத் தெரியலாம்.

பூத்துக் குலுங்கும் மலர்களின் குளுமையில் உங்கள் ரசனை பொதிந்துக் கிடக்கலாம்...... காய்ந்து கிடக்கும் கருவேல மரங்களைக் கவனித்துக் கொண்டு இருப்பவரின் ரசனைக்கு ஒரு காரணம் இருக்கும்.


மேல்தட்டு வாழ்கையின் வெளிப்பாடுகள் மட்டுமே உயர்வான ரசனை என்ற மனோபாவம் நமது தாழ்வு மனப்பான்மையைத் தான் காட்டுகிறது. மேற்கத்திய இசை நாகரிகமான ரசனை என்று ஒருவர் ஏற்றுக்கொண்டு இருப்பதைப் போலவே,இன்னொருவர் உருமி மேளத்தின் இசையை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.இதில் உயர்வென்ன...தாழ்வு என்ன ? 

எல்லா ரசனைகளும் உயர்வானதுதான்.அநாகரிகம் அல்லாத அனைத்தும் ஏற்புக்கு உரிய ரசனைகள்தான். உங்களால் புரிந்துகொள்ள முடியாத ரசனைகளைக் குறைவாக மதிப்பிட வேண்டாம்.அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தனி மனிதரையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.  மாறிக்கொண்டே இருக்கும் ரசனைகளை ஒரு காரணியாகக்கொண்டு மனிதர்களை மதிப்பீடு செய்யமுடியாது.

முடிந்தால் அடுத்தவரின் ரசனையில் இருக்கும் " ரசனைகளையும்" அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். அது மனித உறவுகளை மேம்படுத்தும்..... 

நன்றி : திரு : கோபிநாத் 
           மற்றும் ஆனந்தவிகடன் 

                                                                                            நட்புடன் 
                                                                                            அபுல்.

புதன், 20 அக்டோபர், 2010

கண்களை விற்றா சித்திரம் வாங்குவது ?

நகரத்து வாழ்க்கையால் ஏற்படுகின்ற நன்மை,தீமைகளையும்,கிராமத்து வாழ்க்கையால் ஏற்படுகின்ற நன்மை தீமைகளைப் பற்றி அலசுவதே இந்த பதிவின் மைய கருத்தாகும்......


கிராம வாழ்க்கையிலிருந்து நாம் நகர வாழ்க்கைக்கு மாறியதால் சுகாதாரம் 
தரமான கல்வி,மருத்துவ வசதி,நுட்பமான தகவல் தொடர்பு,வசதியான போக்குவரத்து,சுதந்திரமான மனநிலை, கைநிறைய வருமானம் என பெற்றது அதிகம்தான்.ஆனால் இழந்தது அதைவிட பலமடங்கு அதிகம் என்பதை கேள்வியே இல்லாமல் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையும் அதுவே?

நவீனங்களின் வரவால் தேவைக்கு அதிகமாக ஓய்வை உடலுக்குக் கொடுத்துவிட்டு,நோய்களை வாங்கி கட்டிகொள்கிறோம்.குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை வீட்டுவேலைகளை மட்டும்கூட தாங்களே செய்து வந்தாலே வியாதிகள் எங்கோ ஓடிப்போய்விடும்.உதாரணமாக உடலிலிருந்து வியர்வை வெளியேறும் அளவிற்கு வேலைகள் செய்தால்,
உடம்பில் சேரும் சோடியம் தாது உடம்பை விட்டு வெளியேறும்.

சோடியம் தாது  வெளியேறினால் ரத்த அழுத்த நோய் வருவதற்குன்டான வாய்ப்புகள் மிக குறைவாகும். கூட்டுவது,துணி துவைப்பது போன்ற
குனிந்து  நிமிரும்  வேலைகளைச் செய்தால் தசைகள் வலுப்பெற்று முதுகுவலி ,தண்டுவடவலி ஆகிய நோய்கள் வராமல் தடுக்கப்படும். 


மாவாட்டுவது, அம்மி அரைப்பது,பாத்திரம் கழுவுவது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது போன்ற வேலைகளைச் செய்வதால் கழுத்து,தோள்பட்டை தசைகள் பலப்படும்.கழுத்து நரம்பு தேய்மானம் ஆவது குறைய கூடும்.கர்ப்பிணி பெண்கள் பிரசவ நாள்வரை சின்ன, சின்ன வீட்டு வேலைகளைச் செய்து வந்தால்  இடுப்பு பலம் பெற்று பிரசவம் சுகமாக அமையும் வாய்ப்புகள் அதிகம்.

இப்படி கிராமத்தில் செய்துவந்த வேலைகள் அத்தனையும் நோயை எதிர்க்கும் திறன் பெற்றதாகவே இருந்தது.

ஆணோ.....பெண்ணோ ... அவரவர் வேலைகளை அவர்களே செய்துவந்தாலே அதிகாலையில் எழுந்து யோகா,நடைபயிற்சி,என்று தனியாக நேரத்தை ஒதுக்கி,பூங்காக்களின் பக்கம் ஓட வேண்டிய அவசியமே இருக்காது.

"வெஸ்டர்ன் டாய்லெட்" களின் வசதியைப் பார்த்து விட்ட நாம் அதை நம்முடைய வீட்டுக்குள்ளும் கொண்டு வந்துவிட்டோம். ஆனால் காலங்காலமாக கிராமங்களில் கடைப் பிடித்துவந்த " உட்கார்ந்து எழுவது " என்ற முறையின் மூலமாக தொடை தசைகள் இறுகி,மூட்டு தேய்மானம் குறைவதோடு,குடல் இறக்க நோய் அண்டாமல் இருப்பதன் ரகசியத்தைப் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோம்.

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, முடிகளைப் பலப்படுத்தி
கொட்டாமல் காக்கும்.மஞ்சள் தேய்த்துக் குளிப்பதா,அது
கிரிமி நாசினியாக செயல்பட்டு முகப்பருக்கள் வராமல் காக்கும்.....
ஆலங்குச்சியும்,வேலங்குச்சியும் பல்லை உறுதியாக்கும் .......இப்படி வாழ்க்கைக்கு பயனுள்ள  எத்தனை  எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்களை மறந்ததால்,அதன்  நேர்மாறான பலன்களைத்தான் இப்போது அடைந்த கொண்டிருக்கிறோம். 

குழந்தைகளுக்கு  அடிப்படைத் தேவைகள் என்பது சத்தான உணவு,
விளையாடுமிடம்,நல்லத் தூக்கம். நகரத்து வாழ்கையில் இந்த மூன்றுமே அவர்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை.ஊட்டச்சத்து பானங்கள் 
வீடு நிறைய விளையாட்டுப் பொருட்கள், தூங்க தனி பெட்ரூம் ,குளிர்சாதன வசதி, ...என்று எல்லாமே எங்க பிள்ளைகளுக்கு பண்ணிக் கொடுத்துதானே இருக்கிறோம் ....? என்று நீங்கள் சொல்வது புரிகிறது.

ஆனால் அன்று  சிறு தானியங்களில் இருந்த ஊட்டம் நிறைந்த சத்து இன்றுள்ள உணவுப் பொருட்களில் இருக்கிறதா என்று உங்கள் மருத்துவரிடமே கேட்டுபாருங்கள்.எல்லா உணவு பொருட்களின் விளைச்சலும் செயற்கை உரங்கள் மூலமே விளைவிக்கப்படுகிறது.


உங்கள் குழந்தைகளை மண்தரையிலும்,புல்தரையிலும் விளையாடவிட்டு பாருங்கள்.இதில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை உங்களின் விலை உயர்ந்த விளையாட்டுபொருட்களில் அவர்களுக்கு கிடைகின்றதா என்று பாருங்கள்.
காற்றோற்றமான கிராமத்து வீட்டில் அவர்கள் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்குவதையும், குளிர்சாதனம் பொருத்திய, வீட்டின் சாத்திய அறையில் அவர்கள் தனியே உறங்குவதையும் கொஞ்சம் உங்கள் மனத்திரையில் ஓட விட்டுப்பாருங்கள்......நாம் எதையெல்லாம் இழந்து விட்டோம் என்பது வேகவேகமாக உங்களுக்கு புரியும்.....

பாரம்பரிய வாழ்க்கை,கலைகள்,பண்பாடு என்று எல்லாவற்றையும் இழந்து சினிமா,சீரியல்,தீம்பார்க், என்று செயற்கையான பொழுது போக்குகளை கற்றுக்கொண்டு,கலாச்சார சீர்கேடுகளை அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். மொத்தத்தில் இன்று இயல்பான,இயற்கையான
வாழ்கையை இழந்து நிற்கின்றோம் என்பதே உண்மை.  


உண்மையையை சொல்லப்போனால் " கண்களை விற்று சித்திரம் வாங்க முயற்சி செய்கிறோம் " என்பதே உண்மையிலும் உண்மை.


திங்கள், 18 அக்டோபர், 2010

ரசிக்கத் தெரிந்த மனமே ! உனக்கு ?


பெயின்ட் விற்பனை செய்கிற கடையில் சமீபத்தில் பார்த்த
ஒருகாட்சி.....
பெயின்ட் வாங்க வந்த ஒருவர் " வீட்டுக்குள்ள என்ன கலர் பெயின்ட் அடிச்சா நல்லா இருக்கும் ? இருகிறதுலேயே நல்ல கலர் எது ? என்று கேட்டார். கடைக்காரர்  அழகாக ஒரு பதில் சொன்னார்.....


" கலர்ல நல்ல கலர், கெட்ட கலர்னு ஒன்னும் கிடையாது. உங்களுக்கு எந்த கலர் பிடிக்குதோ அது நல்ல கலர்.உங்களுக்கு பிடிக்காத கலர்,
இன்னொருத்தருக்குப் பிடிக்கும். அதனால எல்லா கலருமே நல்ல கலர்தான்!"

எல்லா மனிதர்களுக்குள்ளும் எதோ ஒரு ரசனை இருக்கிறது.அதைக் கவனிப்பதைவிட,ரசிப்பதைவிட,அடுத்தவரின் ரசனைப்பற்றியே அதிகம் யோசிக்கிறோம்.நம் சமூக சூழலும்,நல்ல ரசனை,மோசமான ரசனை என்று பிரித்துவைத்து இருக்கிறது. அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே  இருக்கிறது.

ரசனை என்பது அவரவரின் தனிப்பட்ட குணாம்சம்.சாந்தமாக,வாழ்வியல் சூழல் சார்ந்ததாக,அனுபவங்கள் ஒட்டியதாக, சுய உணர்வோடு தொடர்பு உடையதாக இருக்கும்போது,உயர்வான ரசனை,மட்டமான ரசனை,என்று தரம் பிரிப்பது எப்படிச் சரியாக இருக்கும்?

ஒரு வகையில் ரசனை என்பதே ஒரு கற்பிதம்தான்.ஐஸ்வர்யா ராய் அழகு என்று சொல்லப்பட்டதால்,அவர் அழகானவர் என்று ஏற்றுக்கொள்கிறோம்.
ஒரு பெண்ணுக்குரிய அழகியல் அம்சங்கள் என்று தனிப்பட்ட முறையில் நாம் வைத்து இருக்கிற ரசிப்புச் சித்தாந்தங்களுக்குள் அவர் வருகிறாரா, இல்லையா என்றெல்லாம் யோசிக்க முடிவதில்லை. 


நாம் கொண்டாடுகிற,பெருமை பேசிக்கொள்கிற உயர்வினை,
மதிப்பீடுகளாக நாமே சித்தரிக்கிற நமது பல ரசனைகள்,புறச் சூழல்களாலும்,செயற்கையான ஏற்பாடுகளாலும்,நம்முள் புகுத்தப்பட்டவைதான்.இதில் உயர்வான ரசனை
கேவலமான ரசனை என்று பாகுபாடு செய்வது எப்படி நியாயமாகும்?

இயற்கை எழிலையும் நிலவின் அழகையும் ரசிக்காத ஒருவர் நல்ல ரசனை இல்லாதவர் என்கிற முடிவுக்கு வர முடியாது. அவருக்கு புழுதிக் காடும்  எருமைக்கூட்டமும் பிடித்து இருக்கலாம்.தத்தித் தத்தி ஓடும் அணில் அழகானது என்பது உங்கள் ரசனையாக  இருந்தால், அங்குலம் அங்குலமாக நகரும் ஆமை இன்னொருவரின் ரசனையாக இருக்கலாம்.

அழகான ரசனை என்று தனியாக ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்வது
உண்மையில் அது போலித்தனத்தின் வெளிப்பாடு. உங்களால் எதை எல்லாம் இயல்பாக ரசிக்க முடிகிறதோ அவை எல்லாம் அழகானவைதான்.


செடிக்குச் செடி தாவும் பட்டாம்பூச்சி உங்களுக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தலாம்.அதற்காக பன்றிக் குட்டியை ரசிக்கிறவனுக்கு ரசனை கெட்டவன் என்று பட்டம் கட்டமுடியாது. நம்முடைய பெரும்பான்மையான ரசிப்புத்தன்மைகள்,நம்மைவிடப் பெரிய ஆட்கள் என்று நம்புகிற மனிதர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவை.

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

இளைஞர்களை வளைத்துப்போடும் வலைத்தளங்கள் ?


இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் விரல்நுனியில் உலகம் வந்துவிட்டது. இது பெருமைப்படக்கூடிய விஷயம். அதேவேளையில் சிறுமைப்படவைக்கும் சில நிகழ்வுகளும் உள்ளன. பொதுவாக இணையதளங்கள் அல்லது வலைத்தளங்கள் இன்று பல்கிப்பெருகிவிட்டன.

புதியபுதிய வலைத்தளங்கள், வலைப்பூக்கள் என எக்கச்சக்கம். இவற்றின் வளர்ச்சியால் லாபம் நஷ்டம் என்று பார்க்க முடிவதில்லை. "தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று எதற்காக கவிஞர் பாடினாரோ தெரியவில்லை. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.

"தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து கொள்ளடா' என கூறத்தோன்றுகிறது. அப்படி என்னங்க நடந்துட்டுது... என அப்பாவித்தனமாகக் கேட்பவர்கள், ஒருமுறை தமிழ் இணையதளங்களில் உலா வந்தால் போதும், அழுதே விடுவார்கள். மேற்கத்திய கலாசாரம் தமிழனைக் கெட்டழித்துவிட்டது. இணையதளங்களில் தேடும் எந்திரத்தில் தமிழில் ஒரு எழுத்தை அடித்தால் போதும், வார்த்தைகளும் விஷயங்களும் தமிழையே அவமானப்படுத்துகின்றன.


இந்தத் "தூய' தமிழால் நாட்டுக்குத்தான் கேடு. காரணம் அத்தனையும் பாலியல் சார்ந்த விஷயங்களாகவே இருக்கின்றன. இதைத் தவிர்த்து அறிவியல், கணிதம், பொறியியல் பற்றி எழுதவேண்டியதுதானே. இதைச் செய்வதால் இவர்களுக்கு என்ன திருப்தியோ அல்லது என்ன லாபமோ? இப்படிப்பட்ட தமிழ் இணையப்பக்கங்களை பெண்களும், சிறுவர்களும் பார்த்தால் என்ன ஆவார்கள்? 

இதுபோன்ற இடுகைகளை இணையதளங்களில் வெளியிடுபவர்களுக்கு தாய், சகோதரிகள் இருக்கிறார்களா இல்லையா?   இந்த இணையதளங்களில்தான் இன்று இளையதலைமுறை மூழ்கிக் கிடக்கிறது. பொது அறிவு வளரும் என்று யாராவது நினைத்து, தங்கள் பிள்ளைகளுக்கு வலைத்தளங்களை அறிமுகப்படுத்தினால் பிள்ளைகள் விரைவாகவே வீணாகிவிடுவார்கள்.இப்படி இளைஞர்களை வளைத்துப்போட இத்தகு வலைத்தளங்கள் ஏராளமாகப் பெருகி வருவது புற்றுநோயைவிடக் கொடுமையானதாகும்.


இவற்றை யார் தடைசெய்வார்கள்.இதைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் எதுவும் உண்டா என்று தெரியவில்லை. சரி, இதை ஏன் பார்க்கிறீர்கள், இதைவிட நல்ல விஷயங்களே உங்கள் கண்ணுக்குப் படாதா என்று கேட்பவர்களும் உள்ளனர்.  நிச்சயமாக இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அறிமுகம். எனவே வலைக்குள் நுழைபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பிற தகவல்களுக்குள் தாராளமாக நுழைவதே சாலச்சிறந்தது. 

வெள்ளி, 1 அக்டோபர், 2010

காமன் வெல்த் போட்டி : கோலாகல துவக்கம் !



காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்  டெல்லியில் நாளை மறுநாள் (03.10.2010) வண்ணமயமான  கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது.

இதில் பங்கேற்க பல நாடுகளை சேர்ந்த 8 ஆயிரம் விளையாட்டு 
வீரர்கள் காமன்வெல்த் கிராமத்தில் குவிந்துள்ளனர். காமன்வெல்த் போட்டிக்கான சுடர் ஓட்டத்தை, இங்கிலாந்து ராணி எலிசபெத், கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி தொடங்கி வைத்தார். இது 54 நாடுகள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயணம் செய்து நேற்று டெல்லி வந்தடைந்தது.

நகரில் முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை மறுநாள் டெல்லி ஜவஹர்லால் ஸ்டேடியத்தை வந்தடைகிறது.அதன்பின் காமன்வெல்த் ஜோதி ஏற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிதொடங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக காமன்வெல்த்போட்டி நடப்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


காமன்வெல்த் போட்டி, நாட்டின் கவுரவம். இதை தேசிய விழாவாக கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது எல்லா பணிகளும் முடிந்து, விளையாட்டு போட்டிக்கு தயார் நிலையில் டெல்லி உள்ளது.

71 நாடுகள் போட்டிகளில் பங்கேற்கின்றன. அந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் வீரர்கள் டெல்லி வந்து தங்கியுள்ளனர். போட்டி நடக்கும் இடங்கள், காமன்வெல்த் கிராமம் உள்பட டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.