முகத்திலே முறுவல், நடையில் நம்பிக்கையின் துள்ளல்.மிடுக்காக உடை அணிந்து தலை நிமிர்ந்து நடந்து வருகிற இளைஞனின் முகத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.வசிகரமா ? கம்பீரமா ? தன்னம்பிக்கையா
எனக்கு அதைச் சொல்ல சரியான வார்த்தை அகப்படவில்லை.
வர்ணிக்க முடியாத அந்த வசீகரத்தின் பின் ஒரு வரலாறு இருக்கிறது.
நெடுநாள்களாக நானறிந்த பையன் அவன்.சில ஆண்டுகளுக்கு முன் வரை அவன் பொருளாதாரப் பின்னணி ஒன்றும் பிரமாதமாக இருந்திடவில்லை.ஆனால் அவன் நம்பிக்கை வைத்திருந்த கல்வியும்,அதற்குப்பின் இருந்த உழைப்பும்,உலகை ஜெயிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவனை மாற்றின.வெற்றியும் இளமையும் இன்று அவன் விலாசங்களாகிவிட்டன.
கம்பீரமான இளைஞன் என் ஜன்னலைக் கடந்து போனான்.அவன் முதுகுப் புறத்தைப் பார்த்த நான் பதறிப் போனேன்.அவனது ஆடையின் பின் புறம் முழுவதும் -மிடுக்கான ஆடை எனச் சற்று முன் சொன்னேனே அந்த ஆடை-முழுக்க சேறு.குதிங்காலில் இருந்து தோள்பட்டைவரை மழைச் சேறு புள்ளி புள்ளியாய் கோலமிட்டிருந்தது.புள்ளிகள் எல்லாம் பெரும் புள்ளிகள்.
எப்படி சேறு வந்தது என்று உற்றுப்பார்த்தேன்.பாதுகாக்கும் என்று எண்ணி அவன் அணிந்திருந்த ரப்பர் செருப்பு தயக்கமின்றி அவன் முதுகில் சேற்றை வாரித் தெளித்திருந்தது.முதுகெல்லாம் சேறு இருப்பதை அறியாமல் அவன் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான்
மிடுக்காக.
அவனது முன்புறத்தையும் முகத்தையும் பாத்தவர்கள் நட்புப் பாராட்டி முறுவலித்தர்கள்.முதுகைப் பார்த்தவர்கள் ஏளனமாக சிரித்து உதட்டோரம் சிரிப்பை ஒளித்துக் கொண்டார்கள்.
ஓடிப் போய் அந்த இளைஞனிடம் உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும் என ஓர் துடிப்பு எழுந்தது. பாதுகாக்கும் என நீ நினைத்த செருப்பு உன்னைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது நண்பா.உதறி தள்ளு அதை என அவனுக்குச் சொல்லும் ஆசையில் எழுந்தேன்.
என் மடியில் இருந்த செய்தித்தாள்கள் நழுவித் தரையில் விழுந்து விரிந்தன.
விரிந்த இதழ்கள் எல்லாவற்றிலும் ஊழல் செய்திகள் ஒலித்துக் கொண்டிருந்தன.காற்றையும் காந்த அலைகளையும் காசு பண்ணிய ஊழல்.படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை பதவியில் இருப்பவர்கள் பங்கு போட்டுக் கொண்ட ஊழல்.அண்டை மாநிலத்தில் அரசு நிலத்தை பெண்டு பிள்ளைகளுக்கு ஒதுக்கிய ஊழல்.
உலக அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் உள்ளிருந்தே சுருட்டிய ஊழல்.வரிக்கு வரி,வார்த்தைக்கு வார்த்தை ஊழல்கள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. அந்த நொடியில் நமது அரசமைப்பு சட்டம் இந்த தேசத்தை "சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசு " என்று வர்ணிக்கின்ற வரி மனதில் ஓடி மறைந்தது.
அத்தனையும் பொய்,அர்ததமற்ற அலங்கார வார்த்தைகள் என உள்ளம் குமுறியது.
உன்னதமான ஒரு கனவு கறைபட்டுப் போனதை எண்ணிய போது இதயத்தின் ஓரத்தில் ஊமை வலி ஒன்று எழுந்தது.உட்கார்ந்து விட்டேன்.அந்த இளைஞனைப் போல் அல்லவா இருக்கிறது என் தேசம்! முதுகிலே இருக்கிற சேறு தெரியாமல் முகத்திலே முறுவல் ஏந்தி நடை போடுகிறது.காலனி போல் காப்பாற்றும் என நினைத்த அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் சகதியை அல்லவா வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.
அலைக்கற்றை ஒதுக்கீடு முறையாக நடந்திருந்தால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருமானம் வந்திருக்கும் என்கிறது மத்திய தணிக்கை அறிக்கை.அரசுக்கு இந்த பணம் வந்திருந்தால் இப்போது உள்ளதைவிட பள்ளிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகரித்திருக்கலாம்.( இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு கல்விக்கு ஒதுக்கிய நிதி 49,904 கோடி ரூபாய் ) எத்தனை விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்திருக்கலாம்! விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு 70 ஆயிரம் கோடி.இது அதைப் போல இரண்டரை மடங்கு அதிகம்.
ஊழலினால் பாதிக்கப்படுவது அமைச்சர்கள் வீட்டு குழந்தைகள் அல்ல.
அதிகாரிகளின் வீட்டு பிள்ளைகளும் அல்ல.பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும்,சிறுதொழில் புரிவோர்க்களும்தான்.ஊழல் நிறைந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெரிய நிறுவனங்கள் ஏகபோக சந்தைகளை உருவாக்கி கொள்கின்றன.அதிக லாபம் அடைகின்றன. அவை இந்த ஊழல்நிறைந்த அமைப்பைப் பாதுகாக்கவே முயற்சிக்கும்.
சமநீதி கொண்ட,சம வாய்ப்புக் கொண்ட ஒரு சமூகத்தில் நம் குழந்தைகள், நம் குழந்தைகளின் குழந்தைகள் வாழ வேண்டும் என நாம் நிஜமாகவே விரும்புவோமானால் ஊளை ஒழிக்கக் களமிறங்க வேண்டும்.அதில் ஈடுபட்டோரையும்,அவர்களைக் காப்போரையும் கடுமையாக விரைந்து தண்டிக்க வகை செய்யும் சட்டங்களும் அமைப்புகளும் கோரி நாம் குரலெழுப்ப வேண்டும்.
ஏனெனில் ஊழலை விடக் கொடுமையானது அதைக் கண்டு அமைதி காப்பது.
நன்றி : திரு.மாலன் அவர்கள்
புதிய தலைமுறை