சென்னை : மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க அவகாசம் தருமாறு பா.ம.க., தான் தேர்தல் கமிஷனிடம் கோரியுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் வருங்காலத்தில் தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கும்படி, சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க., வழக்கு தொடர்ந்திருந்தது. மற்றொரு வழக்கில், இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க, தங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென கோரியிருந்தது. முறைகேடு செய்ய முடியும் என்பதை நேரில் வந்து நிரூபிக்கும்படி தேர்தல் கமிஷன் அழைத்தது. இதையடுத்து, ஒரு வழக்கை பா.ம.க., கடந்த 24ம் தேதி வாபஸ் பெற்றதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பா.ம.க., தலைவர் மணி மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் தேர்தல் கமிஷனுக்கு நேற்று முன்தினம் நேரில் சென்றனர். அப்போது, அவர்களிடம் 10 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டு, அதில் முறைகேடு நடத்தலாம் என்பதை நிரூபிக்கும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இயந்திரங்களை ஆய்வு செய்த பா.ம.க., குழுவினர், தங்களுக்கு மேலும் அவகாசம் அளிக்கும்படி கேட்டனர். இதையடுத்து, தேர்தல் கமிஷன் அவகாசம் வழங்கியது. ஆனால், இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த மணி, ""ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியபோதெல்லாம் அதை ஒரேயடியாக நிராகரித்து வந்த தேர்தல் கமிஷன், முதல் முறையாக, இதுபற்றி விவாதம் மற்றும் செயல் விளக்கத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி,'' என்றார்.
உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் கேட்ட போது, ""பா.ம.க., கேட்டதன் அடிப்படையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சோதனையிட 27ம் தேதி அழைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் கமிஷன் முன்பு பொறியாளருடன் பா.ம.க.,வினர் வந்தனர். மின்னணு இயந்திரங்களை பார்த்த அவர்கள், இவை பற்றி ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும், இன்னொரு நாள் ஒதுக்குமாறும் கேட்டனர். அதற்கு தேர்தல் கமிஷனும் சம்மதித்தது,'' என்றார். ""எனவே, பா.ம.க., தான் தாங்கள் எந்த தேதியில் மீண்டும் வர உள்ளோம் என்பதை தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்கனவே இதுபோல வந்தவர்களை தேர்தல் கமிஷன் திருப்திபடுத்தியுள்ளது,'' என்றார்.
வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைப்பு: ""நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைக்கப்பட்டு, தேர்தல் கமிஷனின் ஒரே தகவல் தளத்தில் சேர்க்கப்படும்,'' என்று நரேஷ் குப்தா தெரிவித்தார். இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியதாவது: தமிழக அளவில் அனைத்து வாக்காளர் பட்டியலும் ஒருங்கிணைத்து தகவல் தளம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, மத்தியில் தேர்தல் கமிஷனின் சர்வரில், நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலின் தகவல் தளம் இடம்பெறச் செய்வது குறித்து டில்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு செய்தால், டில்லியில் இருந்தபடி தமிழக வாக்காளர் பட்டியலை கண்காணிக்க முடியும். மேலும், காஷ்மீரில் உள்ள வாக்காளர் சென்னைக்கு இடம் மாறி வந்தால், அவர் இங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும்போதே, காஷ்மீரில் உள்ள பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு விடும். அதேபோல, புதிய போட்டோ அவர்கள் கொடுக்க வேண்டியதில்லை. ஏற்கனவே, காஷ்மீரில் வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படமே, சென்னை பட்டியலுக்கு மாற்றப்பட்டு விடும். இந்த முறை விரைவில் கொண்டு வருவதற்கான தகவல் சேகரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு நரேஷ் குப்தா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக