சனி, 16 ஜனவரி, 2010

கூகுள் -சீன அரசு மோதல் உச்சகட்டம்








 மனித உரிமைகளை தட்டிக் கேட்டு வெப்சைட்டில் வரும் கருத்துக்களை தாங்கிக்கொள்ள முடியாத சீனா, கூகுள் வெப்சைட்டை தணிக்கை செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால், சீன கம்யூனிச அரசுக்கும், கூகுளுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.



எந்த ஒரு தகவலையும் தெரிந்து கொள்ள இன்டர்நெட் மூலம் வழி செய்வது வெப்சைட்கள். இவைகளை தேடுவதற்காக அமைக்கப் பட்டது தான் யாகூ, கூகுள் போன்ற தேடுதல் சாதனங்கள் (சர்ச் இன்ஜின்). சீன கம்யூனிச ஆதிக்கத்தின் மனித உரிமை மீறிய செயல் களை, கூகுள் வெப்சைட்கள் மூலம் சீனாவைச் சேர்ந்த பலரும் விமர்சித்து வருகின்றனர். இது போதாதென்று, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்த சீனர்கள், இன்டர்நெட்டை பயன்படுத்தி, கூகுள் வழியாக பல வெப்சைட்களிலும், சீனாவில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து பகிரங்கமாக பல தகவல்களை வெளியிட்டு வருவது, சீன கம்யூனிச அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. இதனால், சீன கம்யூனிச அரசு இரண்டு வழிகளில் கூகுள் வெப்சைட்களை கட்டுப்படுத்த திட்டமிட்டது. ஒரு பக்கம், கூகுள் வெப்சைட்களை "அபகரித்து' அதில் உள்ள தகவல்களை தனக்கு சாதகமாக மாற்றி வெளியிட ஆரம்பித்தது. இப்படி பல வெப்சைட்களைத் "திருடி' வந்தது.



இது பற்றி கூகுள் நிறுவனம் கேட்ட போது, தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. உரிய விசாரணை செய்வதாக மட்டும் கூறியது. ஆனால், தொடர்ந்து, சீனாவில் இருந்து தான் கூகுளில் உள்ள வெப்சைட்கள் "திருடப்படுவது' அதிகரித்தது. அதிலும் குறிப்பாக, சீன மனித உரிமை பற்றி சொல்லும் வெப்சைட்கள் மட்டும் இப்படி "திருடப்பட்டு' சீன அரசுக்கு சாதகமாக வெளியிடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல, மனித உரிமை மீறலை கிளப்புவோரின், "இ - மெயில்'களும் மாயமாகி விடுகின்றன.



இப்படி ஒரு பக்கம் தன் "வேலை'யைக் காட்டிய சீன அரசு, தணிக்கை அதிரடியையும் இன்னொரு பக்கம் ஆரம்பித்து விட்டது; "கூகுள் வெப்சைட்களில் சீனாவின் இறையாண்மைக்கு எதிராக தகவல்கள் வருகின்றன; பலான வெப்சைட்கள் அதிகமாக வருகின்றன; அதனால், தணிக்கை செய்து தான் சீன மக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க முடியும்' என்று தணிக்கையை சீனா நியாயப்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் முற்றியதை அடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனை கூகுள் நிறுவன உயர் அதிகாரிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர். "கூகுள் தேடுதல் சாதனம் என்பது, உலகில் உள்ள மக்கள் சுதந்திரமாக தகவல்களை தெரிந்து கொள்ளவும், எண்ணங் களை பரிமாறிக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டது. மக்களுக்கு தகவல்களை அளிப்பது தான் இணைய தளங்களின் பொறுப்பு. அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகிப்பது சரியல்ல; சீனா தன் கெடுபிடியை நீக்கி, கூகுள் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்' என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.



கூகுள் நிறுவனம் சார்பில் உயர் அதிகாரி டேவிட் ட்ரம்மண்ட் கூறுகையில், "கூகுள் வெப்சைட்கள் அடிக்கடி "திருடு' போவதற்கு, சீனாவில் உள்ள சில கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தான் காரணம். திட்டமிட்டு இப்படி வெப்சைட்களை "திருடி' தகவல்களை திரிக்கின்றனர்; இப்படி செய்வதால், ரகசியமான தகவல்கள் திருடப்படுவதும், கடத்தப்படுவதும் எளிதாகி விடும். இதை கூகுள் அனுமதிக்க விரும்பாது. சீன அரசு இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுபோல தணிக்கையையும் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், சீனாவில் கூகுள் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் வரும்' என்று தெரிவித்தார். கூகுள் தேடுதல் சாதனத்தை அதிகம் பயன்படுத்துவோரில் சீன மக்கள் தான் அதிகம்.



சீனாவின் கெடுபிடி நிறுத்தப்படாவிட்டால், விரைவில், சீன மக்களுக்கு கூகுள் மூலமான வெப்சைட்கள் கிடைக்காது; அதனால், பெரிய அளவில் சீன தொழில், வர்த்தகர்கள் முதல் சாதா மக்கள் வரை பாதிக்கப்படுவர். சீன அரசுக்கும், கூகுளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில், கூகுள் பக்கம் அமெரிக்கா உள்ளது. இதனால், சீனாவின் கோபம் அதிகரிக்க வாய்ப்புண்டு. கூகுள் தன் செயல்பாட்டை நிறுத்துவதற்கு முதல் கட்டமாக, பீஜிங்கில் உள்ள தன் அலுவலகத்தை மூட திட்டமிட்டுள்ளது.

நன்றி:
தினமலர்.

வெள்ளி, 15 ஜனவரி, 2010

வியக்க வைக்கும் நிழற் படங்கள்


நொடிக்கு நொடி அறிவியலில் புதிய புதிய கண்டுப்பிடிப்புகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. 
சாதாரணமாக எடுக்கப்பட்ட இந்த நிழற் படங்கள் " அடோப் போட்டோ ஷாப்" மூலம் வியக்க வைக்கும் நிழற் படங்களாக மாற்றி அமைக்கப்பட்டு உங்களின் பார்வைக்காக இங்கே காட்சியாக படைக்கப்பட்டுள்ளது.




  இந்த நிழற் படங்களை பார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டங்களை மறக்காமல் அனுப்புங்கள் .

வியாழன், 14 ஜனவரி, 2010

புதினா:புதைந்து கிடக்கும் உண்மைகள்





கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.

பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.

புதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக  இருந்து வருகிறது.

புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.

இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார்.

எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.

சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும்.

தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

புதன், 13 ஜனவரி, 2010

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்






யாரோ ஒருவர் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை  வைக்க முடிகிறது. அவர்கள் யார் என்று உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விவசாய பெருமக்கள்தான் அவர்கள். 

அறுவடை நாளை மனம் மகிழ்ந்து கொண்டாடும் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. தமிழர் திருநாள் என்றழைக்கப்படும் இதை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தோடு கொண்டாடுகின்றனர். தை முதல் நாளுடனேயே தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கிறது. 

பொங்கல் திருநாளையும், தமிழ் புத்தாண்டுப் பிறப்பையும் ஒரு சேரக் கொண்டாடும் நிலையை நாம் பெற்றிருக்கிறோம்.
 


இது இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் பண்டிகை என்று சொல்லாமல் தமிழர் திருநாள் என்கிறோம். உலகில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் ஒரு விழா என்றால், அது தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவை தவிர வேறு ஏதுமில்லை. 

விவசாய நிலங்களில் இராப்பகலாக உழைத்து அறுவடைக்கு வருகிற நாள்தான் தை. உழைப்பை அறுவடை செய்து தேவையான தானியங்களையும், செல்வத்தையும் வீட்டுக்கு எடுத்து வர காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றி பெருக்கோடு எடுக்கும் விழா என்றால் அதுவும் பொங்கல் திருநாளில்தான்.
 


‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழி எப்படி ஏற்பட்டது தெரியுமா? ‘‘கண்ணை இமை காப்பது போல விவசாய நிலத்தை பாதுகாத்து; நாற்றுகளை நட்டு; அவற்றுக்கு தேவையான உரம், நீரை இட்டு பாதுகாக்கும் காலகட்டத்தில் விவசாயின் கையில் நையா பைசா இருக்காது. 

நிலத்தில் விளைந்ததை அறுவடை செய்து அதை விற்று முடித்த பிறகே, அவன் கையில் காசு இருக்கும். புதுத் துணி, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது; வாரிசுகளின் திருமணம் என மகிழ்ச்சியோடு தை மாதத்தில் ஒவ்வொன்றாக மன நிறைவோடு செய்து முடிப்பான் விவசாயி.
 


இதனால்தான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழியே தோன்றியது என்கிறார்கள் முன்னோர்கள். பொங்கல் திருநாள் ஒருநாளில் முடியும் பண்டிகை அல்ல. போகிப் பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்களும் தமிழர்களுக்கு உற்சாகமான நாட்கள்தான்.
 

போகி
மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. பழையன கழிதலும்; புதியன புகுதலும் இத்தினத்தில்தான் நடக்கிறது.
இதற்காகதான் தைப் பொங்கலுக்கு முன்பே வீட்டுக்கு புதிதாக வெள்ளையடித்து, பழையப் பொருட்களை மூட்டைக்கட்டி போகிப் பண்டிகை அன்று தீயிட்டு கொளுத்துகிறோம். இப்படி செய்யும் போது பழையன கழிந்து விடுகிறது.
 


தைப் பொங்கல்
 சந்திரன், சூரியன் போக்கை வைத்து காலத்தை கணித்தவர்கள் நம் பழம்பெருமைக் கொண்ட தமிழர்கள். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் இயற்கை நிகழ்வை தைத் திருநாளாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் தமிழர்கள் புத்தாடை அணிவார்கள். அறுவவையில் கிடைத்த அரிசி, கரும்பு சாறில் எடுக்கப்பட்ட வெல்லம், பால், நெய் இட்டு பொங்கல் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் போதே வீட்டில் உள்ளவர்கள் ‘பொங்கலோ.... பொங்கல்’ என்று உற்சாக முழக்கம் செய்வார்கள். சூரியனுக்கு தனியாக பூஜை செய்து வணங்கி மகிழ்வார்கள்.
 


மாட்டுப் பொங்கல்
தைப் பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாள் வருவது மாட்டுப் பொங்கல். உழவர்களின் நண்பர்களான கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் உழவுக்கு உதவிய விவசாய கருவிகள், ஏர் ஆகியவற்றை சுத்தம் செய்து மஞ்சள், குங்கும் வைத்து வழிபடுவார்கள். கால்நடைகளையும் சுத்தம் செய்து, அதன் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி அழகுப்படுத்துவார்கள். அதற்கு பொங்கல் கொடுத்தும் அந்நாளை கொண்டாடி மகிழ்வர். கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் மாட்டுப் பொங்கல் களைகட்டும்.
 


காணும் பொங்கல்
கடைசி நாளை காணும் பொங்கலாக தமிழர்கள் கொண்டாடுகின்றனர். இதை கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கிறார்கள். இன்றைய தினத்தில் உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வார்கள். பெரியோர்களிடம் ஆசி பெறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் உரி அடித்தல், கலைநிகழ்ச்சிகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இந்நாளை கழிப்பார்கள்.
 


இவற்றோடு பொங்கல் திருநாளில் தனியாக இடம் பிடிப்பது ஜல்லிக்கட்டு. தை மாதம் தொடங்கி பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அமர்க்களப்படும். இதேபோல் சாவக்கட்டு என்றழைக்கப்படும் சேவல் சண்டைகளும் கிராமங்களில் நடத்தி மகிழ்வார்கள். பொங்கல் திருநாள் இப்படி நான்கு நாட்களுக்கு களைகட்டும். பொங்கல் விழா தமிழர்களின் பெருவிழா!

உலகில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய 
" தமிழ் புத்தாண்டு  மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்" 



செவ்வாய், 12 ஜனவரி, 2010

மனிதம் கொன்று தின்ற மந்திரிகள்







ஒரு கொலைச் சம்பவம் சரியாகக் கையாளப்படாதபோது,​​ அதைக் காண நேர்ந்திராதவர்களையும் காயப்படுத்தி,​​ மனதை ரணமாக்கி,​​ பீதிக்குள்ளாக்கிவிடும் என்பதற்கு ஓர் உதாரணம்,​​ அண்மையில் நெல்லைச் சீமையில் ஆழ்வார்குறிச்சி அருகே காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்!

இறந்தவர் காவல்துறை உதவி ஆய்வாளர் என்பதோ அல்லது ஆள்மாறாட்டத்தால் நடந்த கொலை என்பதோ இதில் முக்கியமில்லை.​ ஒரு மனிதர்,​​ ஒரு வன்முறைக்கும்பலால் வலதுகால் வெட்டித் துண்டிக்கப்பட்டு,​​ ரத்தம் சொட்டச்சொட்ட சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறார்.​ ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.​ 

பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள்.​ விடியோ கேமராக்கள் வலம் வருகின்றன.​ தமிழக அரசின் இரண்டு அமைச்சர்கள் தங்களது ஆள்,​​ படை,​​ வாகனங்களுடன் நிற்கிறார்கள்.​ ஆனாலும் சாலையில் விழுந்துகிடக்கும் மனிதருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.​ இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

​​அவருக்குத் தண்ணீர் கொடுக்கச் செல்லும் நபர்,​​ அங்கே தலையை உயர்த்தி ஏதோ பேச வரும் உதவி ஆய்வாளரின் கைக்குள் சிக்காமல் விலகி ஓடுகிறார்.​ ஏதோ மனிதவெடிகுண்டைக் கண்டதைப்போல!​ ​ எதற்காக இந்தக் கொலை?​ அவர் சொல்ல வரும் விஷயம் என்ன?​ அத்தனை பேர் அருகிருந்தும் அவரது கடைசி வார்த்தையை,​​ அவர் பிரக்ஞையுடன் இருக்கும்போதே கேட்கத் துணியும் நபர்கள் யாருமே இல்லை.​

அமைச்சருடன் இருந்த சில அரசியல்வாதிகளைத் தவிர,​​ பலரும் காவல்துறையில் பணிபுரிபவர்கள்.​ அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சிகள் நிச்சயமாக அளிக்கப்பட்டிருக்கும்.​ அவர்கள் ஏன் வெற்றிவேலை உடனடியாக ஒரு காரில் கொண்டு செல்லவில்லை?​ 

வலது கால் துண்டான நிலையில்,​​ ரத்தப் போக்குடன் துடித்துக் கொண்டிருந்த அவரை,​​ அங்கிருந்த ஏதேனும் ஒரு காரில் கொண்டு செல்லவும்,​​ எதிர்ப்படும் 108 ஆம்புலன்ஸýக்கு அவரை மாற்றி,​​ முதலுதவியை முறைப்படி அளிக்கவும் செய்திருந்தால் வெற்றிவேல் பிழைத்திருக்கக்கூடும்.​ 

அமைச்சர் அல்லது அவருடன் வந்த கார்களைப் பயன்படுத்த பலத்த யோசனை ஏன்?​ கார் ரத்தக் கறை பட்டுவிடுமே என்ற அச்சம்தானே!​ அல்லது,​​ காரிலேயே அவர் இறந்துவிட்டால் அந்தக் காரின் புனிதம் கெட்டுவிடுமே என்ற எண்ணமா?​ எதற்காகக் கடைசிவரை காத்திருந்து,​​ 108 வாகனம் வராது என்று தெரிந்தபிறகு அவரை ஒரு காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்!.

"ஆம்புலன்ஸில் எல்லா வசதிகளும் இருக்கும் என்று நினைத்தோம்.​ இதுபோன்று காயமடைந்தவர்களைக் கையாண்டு பழக்கமில்லை' என்று பொது சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.​ கே.​ பன்னீர்செல்வம் சொல்வது அவரது அமைச்சர் பதவிக்கும்,​​ பொறுப்பு வகிக்கும் துறைக்குமே பெருத்த அவமானம்.​ இத்தகைய ஒரு பதிலை,​​ சாதாரண மனிதர்கள் சொல்லலாம்.​ ஆனால் ஓர் அமைச்சர் சொல்லலாமா?​ ​ 

108-க்குப் போன் செய்வது ஏதுமறியா பாமரனின் வேலை.​ ஒரு பொறுப்புமிக்க அமைச்சர் ​ கட்டளையிட்டால்,​​ செயல்பட ஆள்,​​ படை,​​ வாகனம் எல்லாமும் உடன் நிற்கிறது.​ ஆனால் அமைச்சர்களும் வேடிக்கை பார்ப்பதென்றால்..

காமராஜ் முதல்வர் பதவியில் இல்லாத வேளையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடத்தப்பட்டது.​ மாநாட்டுக்கு வெளியே ஒரு காங்கிரஸ் தொண்டர்,​​ ஆளும் கட்சியினருடனான மோதலில் காயமடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட மேடைக்கு அழைத்துவரப்பட்டபோது,​​ "அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் இங்கே ஏன் அழைத்து வருகிறீர்கள்' என்று காமராஜ்,​​ அவர்களைக் கடுமையாகத் திட்டி,​​ விரட்டி அடித்தார்.​ 

அவரது கோபத்துக்குக் காரணம் மேடை ரத்தக்கறை ஆகிவிடுமே என்ற அருவருப்பு அல்ல.​ மாநாட்டு மேடையில் இரத்தத்தைக் காட்டி தொண்டர்களை சூடுபடுத்துவதைத்தான் அவர் அருவருப்பாகக் கருதினார்.

ஆனால்,​​ சாலையில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் ஒருவரை இரு அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் தங்கள் காரில் ஏற்றிச் சென்றிருந்தால்,​​ அவர்களது வெள்ளைக் கார்களில் படிந்திருக்கக்கூடிய ரத்தக் கறை ஆட்சியையும் அவர்கள் சார்ந்த கட்சியையும்கூட பெருமைப் படுத்தியிருக்கும்.​ ஆனால் அமைச்சர்கள் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை.​

அவர்களும் 108-க்குப் போன் செய்வார்கள் என்றால் அவர்களுக்கு அமைச்சர் பதவிக்கான தலைமைப்பண்பு இல்லை என்பதைத் தவிர,​​ சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது.இந்தச் சம்பவம் முழுவதும் வடஇந்திய தனியார் டி.வி.​ சானல்களில் ஒளிப்பரப்பாகின.​ தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவான தனியார் டி.வி.​ சானல்கள் இதைத் தணிக்கை செய்து ஒளிபரப்பின என்றாலும்,​​ எதிர்க்கட்சியின் தொலைக்காட்சியில் இதே கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகின.​ 

அமைச்சர்களின் செயலை அம்பலப்படுத்துவதற்காக இதைச் செய்திருக்கிறார்கள் என்றாலும்,​​ இதைக் காண நேர்ந்த பொதுமக்கள்,​​ சிறார்கள் மனதில் எத்தகைய பதற்றத்தை,​​ பீதியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்தின என்பதை விவரிக்க இயலாது.​ ஓர் உயிரின் துடிப்பு,​​ பலரையும் துடிதுடிக்க வைத்தது.​ ​அந்த அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் எத்தனை தவறோ அதே அளவுக்குத் தவறான செய்கை-​ தனியார் டி.வி.​ சானல்கள் இதை ஒளிபரப்பி அதன்மூலம் பரபரப்பை ஏற்படுத்த முற்பட்டது!

நன்றி:
தினமணி