உலகின் முதல் டபுள் டன் ஹீரோ சச்சின் ! அவருக்கு "பாரத ரத்னா" வழங்கியாக வேண்டும் என்கிறார் கபில்தேவ். ஆம்....சச்சின் கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள். இவர் படைக்காத சாதனைகளே இல்லை,தனது சாதனைகளையே உடைத்து,புதிய,புதிய சாதனைகளைப் படைக்கிற ஆட்டக்காரர்.
சச்சின் ஆடுகிற ஒவ்வொரு போட்டியிலும்,அடிக்கிற ஒவ்வொரு ரன்னுக்கும் உலக கிரிக்கெட் வரலாற்றை அப்டேட் செய்ய வேண்டி இருக்கிறது.
- சச்சின் ரமேஸ் டெண்டுல்கர் என்பதுதான் முழுப்பெயர்.சச்சினின் அப்பா பிரபல மராத்தி எழுத்தாளர்.அவர் சச்சின் தேவ் பர்மன் என்னும் இசை அமைப்பாளரின் தீவிர ரசிகர் என்பதால் மகனுக்கு "சச்சின்" என்று பெயர் வைத்தார்.
- 1988 -ம் ஆண்டு மும்பை வித்யா மந்திர் பள்ளியில் படித்தபோது வினோத் காம்ளியுடன் இணைந்து குவித்த 664 ரன்கள்தான் சச்சினை கிரிக்கெட் உலகுக்குக் கொண்டுவர உதவியது.மும்பை அணிக்காக ஆடிய ரஞ்சிக் கோப்பையிலும் முதல் போட்டியிலேயே சதம் அடித்து சட்டென எல்லோர் மனதிலும் பதிந்தார் சச்சின்.
- சச்சினை கிரிக்கெட் விளையாட ஆர்வப்படுத்தியவர் அவரது அண்ணன் அஜித்.மும்பை பாந்த்ராவில் இருந்த சச்சினின் வீட்டில் இருந்து, கிரிக்கெட் கோச்சிங் போய் வர முடியாது என்பதால் சிவாஜி நகரில் உள்ள மாமா வீட்டில் சச்சினைத் தங்கவைத்து கூடவே இருந்தார் அண்ணன் அஜித்.



