வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

2009-ம் ஆண்டு உலக பொருளாதாரம் ஒரு பார்வை !



* உலக பணக்காரர்கள் பட்டியலில் உருக்கு ஆலை அதிபர் லட்சுமி மிட்டலை பின்னுக் குத் தள்ளி முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி. இந்திய பணக் காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியரும் உருக்கு அதிபருமான லட்சுமி மிட்டல் அடுத்த இடத்துக்குத் தள்ளப் பட்டார். அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது.

* இந்தியாவில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எ வேல்யூ செர்வ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்தியா தனியார் பங்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் உள்ள ஏழு நாடுகளில் ஒன்றாக உள்ளது.

* கெல்லி சர்வீசஸ் நிறுவனம் உலகம் முழுவதும் ஊழியர்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஓர் சர்வே நடத்தியது. அதில் பல சுவாரஸ்ய மான தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 28 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இந்தியாவில் மிக மகிழ்ச்சியான ஊழியர்கள் ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா-துபை இடையிலான வர்த்தகம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.45,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2002-ம் ஆண்டில் இந்தியா- துபை இடையிலான வர்த்தகம் ரூ.12,000 கோடியாக இருந்தது. இது 6 ஆண்டுகளில் 340 சதவிகிதம் உயர்ந்து ரூ.45,000 கோடியாக அதிகரித்துள்ளது.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

ஒரே மாத்திரை... ஓஹோன்னு வாழ்க்கை


 
  

நூறு ஆண்டுகள் வாழ இனி ஒரு மாத்திரை போதும் என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். நோய்களைத் தடுக்கும் 3 ஜீன்களை பயன்படுத்தி அந்த மாத்திரை தயா ரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதுபற்றி நியூயார்க்கின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவ கல்லூரியில் வயது தொடர்பான  ஆராய்ச்சி மையம் சார்பில் ஆராய்ச்சி நடந்தது. அந்த குழுவுக்கு விஞ்ஞானி நிர் பர்ஜிலய்  தலைமை வகித்தார். 

அவர்களது கண்டுபிடிப்பின்படி மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கவும்,  நோய்களைத் தடுக்கவும் 3 ஜீன்கள் உதவுவது தெரிய வந்தது.
அந்த மூன்றில் இரண்டு ஜீன்கள், உடலில் நல்ல கொலஸ்டிராலை உற்பத்தி செய்கின்றன.  இது இதய நோய்கள், பக்கவாதம், மூளை செயல்திறன் மாறுபாடு (அல்சமீர்) ஆகியவற்றைத்  தடுக்கிறது. 

புதன், 3 பிப்ரவரி, 2010

வைகோ : ஒரு சிறப்புப் பார்வை !

 



அரசியல் மேடைகளில் வைகோ உமிழும் ஒவ்வொரு வெப்ப வார்த்தையும் களத்தை கொதிகலனாகவே வைத்திருக்கும்.போர்வாள்,புரட்சிப்புயல்,என பளீர் பட்டங்களால் அடையாளம் காணப்படும் பிளாக் டைகர்.பொது வாழ்க்கையில் பம்பரமாகச் சுழன்று கொண்டு  இருப்பவரின் பெர்சனல் பக்கங்களில் இருந்து  இங்கே கொஞ்சம்.....

வை.கோபாலசாமி என பெற்றோர் வைத்த பெயரைத் தொண்டர்கள் சுருக்கி வைகோ என்று அழைக்க அதையே தனது பெயராக வைத்துக்கொண்டார்.அந்த காலத்தில் அவரது தாத்தாவை அனைவரும் " அகோ " என்பார்களாம்.

எட்டு வயதில்,காந்தியின் பேரன் கிருஸ்ணதாஸ் காந்தியின் முன்னால் பூமிதான இயக்கத்தை ஆதரித்து இவர் பேசியதுதான் முதல் மேடை பேச்சு.ஐந்தாம் வகுப்பு மாணவனாக எட்டையபுரம் பாரதி விழாவில் கலந்து கொண்டது முதல் போட்டி.

நெல்லை சவேரியார், சென்னை மாநில கல்லூரி,சட்ட கல்லூரியில் படித்த காலங்களில் அத்தனை பேச்சு போட்டிகளிலும் முதல் பரிசு இவருக்குதான்.இவருக்கு சளைக்காமல் சவால் கொடுத்தவர் " வலம்புரி ஜான் ".

மே 22 இவரது பிறந்த நாள்.ஆனால் சின்ன கொண்டாட்டம் கூட இருக்காது.அன்றைய தினத்தில் எங்கு இருக்கிறார் என்று குடும்பத்தினர் தவிர,யாருக்கும் தெரியாது !

இதுவரை, 28 முறை சிறை சென்றுள்ளதில்,நான்காண்டுகாலம் சிறையில் கழிந்திருக்கிறது.திராவிட இயக்க தலைவர்களில் அதிக நாட்கள் சிறையில் இருந்தவர். சிறையில் எப்போதும் சிறப்பு வகுப்பு வாங்கிக்கொள்ள மாட்டார்.

பொடாவில் வைகோ கைதானதைக் கண்டித்து  1 கோடியே  10 லட்சம் பேர் கையெழுத்துப் போட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியது போன்று இதுவரை வேறு எவரது கைதுக்கும் நடந்ததா என்பது சந்தேகம்தான்!

எந்த மேடைப்  பேச்சுக்கு முன்னரும் இரவு உணவை சாப்பிட மாட்டார். பசி இருந்தால்தான் பேச்சும்,குரலும்,சரியாக வரும் என்பார்.

சிவப்பு சட்டை,கறுப்பு பேன்ட் சீருடையுடன் தி.மு.க. வில் இப்போது வலம்வரும் தொண்டர் படையை அப்போது உருவாக்கியவர் வைகோ. " ஆயுத படையை உருவாக்குகிறார்" என்று அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். வைகோவையும்  300 தொண்டர்களையும் கைது செய்தார். இன்று ம.தி.மு.க-விலும் அப்படி ஒரு பெரும்படை இருக்கிறது.

கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றதற்காக கருப்பு,சிவப்பு, மோதிரம் ஒன்றை இவருக்கு அணிவித்தார்கள். எமெர்ஜென்சி காலத்தில் சிறை சென்ற போது மோதிரத்தை கழற்றச்  சொன்னார்கள். அதன் பிறகு 40 ஆண்டுகளாக வைகோ மோதிரம் அணிவதே இல்லை.

கருப்பையா மூப்பனார், இவர் மீது பாசமாக இருப்பார்.வைகோ வைத்திருக்கும் சூட்கேஸ் மூப்பனார் கொடுத்ததுதான்.வைகோவை காங்கிரசில் சேரச் சொல்லி ராஜீவ் காந்தி தூது அனுப்பியதும் மூப்பனாரைத்தான்.

விமான விபத்தில் சஞ்சய் காந்தி பலியான மறுநாள், நாடாளுமன்றத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே அவரை அவமானப் படுத்துவது போல பேசினார். உடனே வைகோ " இறந்தவர் குறித்து விமர்சிப்பது தவறு.சஞ்சய் காந்தியின் உடலைகூடப் பார்க்காமல் அவருடன் பலியான விமானி வீட்டுக்கு ஓடிபோய் அஞ்சலி செலுத்தியவர் இந்திரா.

ஆனால் பிரதமர் மொரார்ஜியைக் காப்பாற்றுவதற்காகப் பலியான ஐவர் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்க உங்களில் ஒருவர்கூடச் செல்லவில்லை! என்று பதிலளித்தார்.அந்த பேச்சுதான் தலைநகரத்தில் வைகோ மீது பலரது கவனத்தை ஈர்த்தது.

தமிழீழத்துக்கு ரகசியமாகச் சென்று 23 நாட்கள் தங்கி இருந்திருக்கிறார்.அப்போது " உங்களது வாழ்க்கைக் கதையை நான் எழுதுகிறேன் " என்று வைகோ கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 15 நாட்கள் மனம்விட்டு பேசி இருக்கிறார் பிரபாகரன். அந்த குறிப்பும் கேசட்டும் இன்றும் வைகோவிடம் உள்ளது!

வைகோ திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி தர ஒப்புகொண்டு இருந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. திருமண நாள் அன்று அவருக்குத் திடீர் கண்வலி.கருணாநிதிக்குப் பதில் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் வைகோ திருமணம் நடைபெற்றது.

காலை 11  மணிக்கு வேகவைத்த காய்கறி, மதியம் 4 மணிக்கு, பயிறு வகைகள்  சாப்பிடுவது இவரது பழக்கம்.

அலெக்சாண்டர், நெப்போலியன்,உமர் முக்தார், சே குவேரா,கரிபால்டி,ஆகிய ஐவரும் வைகோ மிகவும் ஆராதிக்கும் மா வீரர்கள்.

தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ள இவரிடம் கடந்த  35 ஆண்டு கால டைரிகள் பத்திரமாக இருக்கின்றனவாம்.

கார் பயணங்களில் எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள்தான் ஒலிக்கும்.அவ்வப்பொழுது தியாகராஜ பகாவதர், பி.யு.சின்னப்பா பாடல்களும் அவரின் விருப்பமாகும்.

அசைவ உணவுகளின் ஏகப் பிரியர்.அம்மா மாரியம்மாள் வைக்கும் கோழிக் குழம்புக்கு ஆயுட்கால அடிமை.

வைகோ தோளில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட  கருப்பு சால்வையை முதலில் அணிவித்தவர் சங்கரன்கோயில் பிச்சையா.தன் மகள் திருமணத்திற்கு வந்தவருக்கு  1985 -ம் ஆண்டு கருப்பு சால்வை அணிவித்தார் பிச்சையா.ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புது சால்வை இன்றும் அனுப்ப்பிகொண்டு இருக்கிறார் பிச்சையா.

தமிழ்,ஆங்கிலத்தில் வெளியாகும் அனைத்து முக்கிய திரைப் படங்களையும் தியேட்டரில் பார்த்துவிடுவார். சமீபத்தில் இவர் பார்த்த படம் " அவதார் ".

குறிப்புகள் இல்லாமலேயே மணிக்கணக்கில் மேடையில் பேசும் வழக்கம்கொண்டவர். நா சுளுக்கும் கரடு முரடான சங்க இலக்கிய பாடல்களைக்கூட இரண்டு ,மூன்று,முறை வாசித்ததுமே அட்சரம் பிசகாமல் ஒப்பிப்பார்.

வைகோவின் அக்கா கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர் என்பதால்,இவரது மேடைப் பேச்சில் சில சமயம் பைபிள் மேற்கோள் எட்டிபார்க்கும்.

வைகோவிற்கு வரும் கடிதங்களையும், அவர் அனுப்பும் கடிதங்களையும் பிரித்துப் படிப்பதற்கு சென்னைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வெளிப்படையான அரசாங்க உத்தரவே போட்டு இருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.

சமாதான  காலத்தில் ஈழத்துக்கு வர வைகோவிற்கு அழைப்பு வைத்தார்கள்.
" சுதந்திரத் தமிழ் ஈழத்துக்குத்தான்  இனி நான் வருவேன் "  என்று அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

வாலிபால்,பேஸ்கட்பால்,புட்பால் விளையாட்டுகளைப் பற்றி மணிக்கணக்கில் கூட பேசிக்கொண்டு இருப்பார். டி.வி-யிலும் நேரிலும் இந்தப் போட்டிகளைப் பார்ப்பதில் அலாதியான் ஆர்வம் கொண்டவர். 

நன்றி :
விகடன்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 5)


  
6 பேர்களை கொலை செய்த ஆட்டோ சங்கர், சிறையில் இருந்து தப்பி ஓடினான். ஆட்டோ சங்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 21.8.1990 அன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. அதற்கு முந்தின நாள் போலீசுக்கு பெரிய அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தது.
அதாவது 20.8.1990 அன்று நள்ளிரவு சென்னை மத்திய சிறையில் இருந்து ஆட்டோ சங்கர், அவனது தம்பி மோகன், கூட்டாளி செல்வராஜ் ஆகியோர் தப்பிவிட்டனர். இவர்களுடன் அதே ஜெயில் அறைக்குள் இருந்த மற்றொரு கொலை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீல் ராஜா, சுண்டல் குமார் ஆகியோரும் ஓடிவிட்டனர்.
இந்த 5 பேரும் தப்புவதற்கு ஜெயில் ஊழியர்கள் சிலரும், வக்கீல் ராஜாவின் நண்பனான உதயா (ஜெயிலில் இருந்து பரோலில் வெளியே வந்து தலைமறைவாக திரிந்தவன்) என்பவனும் உதவியாக இருந்தார்கள்.
உதயா, சம்பவத்தன்று நள்ளிரவில் காரில் மத்திய சிறைச்சாலை அருகே சென்று மரத்தில் ஏறி நின்று ஜெயில் காம்பவுண்டுக்குள் கயிற்றைப் போட்டான். அந்த கயிறு வழியாக 5 பேரும் ஏறி வெளியே குதித்து தப்பினார்கள்.
தப்பிய 5 கைதிகளையும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள். ஒரு வாரத்தில் வக்கீல் ராஜா, சுண்டல் குமார் இரு வரும் பெங்களூரில் சிக்கினார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆட்டோ சங்கர் தன்னுடைய புதிய காதலி தேவியுடன் ஒரிசா சென்று இருப்பதாக தெரியவந்தது.
அதோடு ஆட்டோ சங்கருக்கு தேவியுடன் ஏற்பட்ட தொடர்பு மற்றும் அவனைப்பற்றிய காதல் விவகாரங்களும் வெளிவந்தன. ஜெயில் பறவையாக இருக்கும் போது ஆட்டோ சங்கரே இவற்றை ஜெயில் நண்பர்களிடம் கூறி இருக்கிறான்.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஆட்டோ சங்கரின் காதல் வலையில் தேவி சிக்கினாள். தேவி, சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவள். அவளுடைய கணவன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை பார்க்க தேவி வந்தபோது, ஆட்டோ சங்கரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடிக்கடி சந்தித்து பேசியதில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தேவிக்கு ஆட்டோ சங்கர் அவனுடைய பெயர் பதித்த மோதிரத்தை பரிசாக வழங்கினான். அதேபோல், தேவியும் அவளுடைய பெயர் பதித்த மோதிரம் ஒன்றை பரிசாக கொடுத்தாள். 
இப்படி 6 மாத காலமாக ஆட்டோ சங்கர் தேவிக்கு ஜெயில் காதலனாக இருந்தான். காதலியுடன் உல்லாச வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆட்டோ சங்கர் தப்பினான் என்றும் தெரியவந்தது.
இதன் பேரில் போலீசார் வக்கீல் ராஜா, சுண்டல் குமார் ஆகியோருடன் ஒரிசாவில் உள்ள ரூர்கேலாவுக்கு சென்றனர்.
ரூர்கேலா நகரம் அருகே ஒரு குடிசை வீட்டில் ஆட்டோ சங்கர் அவனுடைய காதலியுடன் தங்கியிருப்பதாக போலீ சுக்கு தகவல் கிடைத்தது. அங்கு தேவி கழுத்தில் தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்தான்.
அந்த கிராமத்தின் முக்கிய புள்ளிகள் உதவியுடன் போலீசார் மாறுவேடத்தில் சென்று ஆட்டோ சங்கரையும், காதலி தேவியையும் மடக்கி பிடித்தார்கள். ஆட்டோ சங்கர் கைவிலங்கு மாட்டி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டான்.
போலீசில் சிக்கிக்கொண்டதும் ஆட்டோ சங்கர் அதிர்ச்சியில் உறைந்துபோனான். எதுவும் பேசவில்லை. தேவி தேம்பி தேம்பி அழுதாள். தப்பி ஓடிய 12 நாட்களில் போலீசார் அவனை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.ஆட்டோ சங்கரின் தம்பி மோகன், கூட்டாளி செல்வராஜ் ஆகிய 2 பேரும் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் பாட்னா விரைந்தனர்.
அங்கு மோகனும், செல்வராஜ-வும் சி.ஐ.டி. போலீசிடம் வசமாக சிக்கினார்கள்.
ஒரிசாவில் இருந்து சென்னைக்கு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. அதனால் சங்கரும், தேவியும் விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆட்டோ சங்கர் பாண்ட், முழுக்கை சட்டை அணிந்திருந்தான். சட்டையின் இரு கைகளையும் மடக்கி விட்டு ஸ்டைலாக வந்தான்.
போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டி.ஜி.பி) துரை முன்பு ஆட்டோ சங்கரை ஆஜர்படுத்தினர். அப்போது ஆட்டோ சங்கரை நிருபர்கள் பார்த்தார்கள். சங்கரை போட்டோ படம் எடுத்தனர். மறுநாள் சங்கரும்_தேவியும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். விசாரணைக்காக 2 பேரையும் 7 நாட்கள் காவலில் வைக்க போலீசார் அனுமதி பெற்றார்கள். கோர்ட்டு விசாரணை முடிந்ததும் ஆட்டோ சங்கரும், தேவியும் ஐ.ஜி. அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இன்னும் வரும் ............................

திங்கள், 1 பிப்ரவரி, 2010

ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள்

 
உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அமெரிக்க கிராமி அவார்டு தமிழகத்தை சேர்ந்த ஏர்.ஆர்.ரகுமானுக்கு கிடைத்துள்ளது. 

இந்த விருது கிடைத்தது எல்லாம் இறைவன் அருளால்தான் என்றும், தமது இந்திய ரசிகர்களின் அன்பும் , ஆதரவும் எனக்கு தொடர்ந்து அளித்து வரும் அவர்களுக்கு இத் தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஏர்.ஆர்.ரகுமான், கடந்தாண்டு இசையமைத்து வெளிவந்த ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் சிறந்த பாடல் ஜெய் கோ மற்றும் இசைக்காக 2 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. இப்படத்திற்கு இசை உட்பட எட்டு விருதுகள் கிடைத்தன. 

இதன்மூலம் தனிநபராக ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஏர்.ஆர்.ரகுமான் பெற்றார். இதனைதொடர்ந்து இவருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில் இவருக்கு மேலும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ஆண்டுதோறும் அமெரிக்காவில் கிராமி விருதுகள் வழங்கப்படுகிறது. அதில் இந்தாண்டுக்கான சிறந்த சவுண்ட் டிராக் மற்றும சிறந்த பாடல் ( ஜெய் ஹோ ) ஆகியவற்றுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

ஸ்லம்டாக் மில்லினர் படத்தினன்மூலம் இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. லாஞ் ஏஞ்சல்ஸ்சில் நடந்த விழாவில் விருதினை பெற்ற ஏர்.ஆர்.ரகுமான் , பேசுகையில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை, கடவுள் மீண்டும் ஒருமுறை இவ்விருதினை தமக்கு வழங்கியுள்ளார்.


இது எல்லாம் கடவுள் அருளால் தான் நடந்துள்ளது. இறைவனுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியர்களின் பேராதரவும், அன்பும் அவரதும் பிரார்த்தனையும் எனக்கு எப்போதும் உள்ளது. இதன் மூலம் இந்த கிராமி விருதை பெற்றதை இந்தியர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


பன்டிட் ரவிசங்கர், விக்கு வினாயம், ஜாகீர் உசேன் , விஸ்வமோகன்பட் ஆகியோர் இந்த கிராமி விருது பெற்ற இந்தியர்கள் ஆவர். 

நன்றி: 
தினமலர்.