வியாழன், 25 பிப்ரவரி, 2010

மருத்துவத்தின் தலைவாசல் தமிழகம் (பகுதி- 3)



தொடர்ச்சி.............................

சிறந்த தொழில் நுட்பத்தைத் தமதாக்கிக் கொள்வதிலும் புதுமையான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் தமிழக மருத்துவமனைகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மருத்துவமனைகளில் சாவித் துவாரம் அளவுக்கு மட்டும் உடலில் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இப்போது அது அடுத்த கட்டத்தையும் தாண்டிவிட்டது. தற்போது ஊசி முனையளவு துளையிட்டு அதில் நுண்ணிய குழாய்களைச் செலுத்தி ரத்த குழாய் அடைப்பு முதல் வீக்கம் வரை அனைத்தையும் சரி செய்யும் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது.இதனால் உடலில் தேவை அற்ற வடுக்கள் ஏற்படாது என்பதுடன் ரத்த சேதாரத்திற்கும் வழியின்றி போகிறது.

பெருங்குடியில் இயங்கி வரும் லைப்லைன் மருத்துவமனை உடற்பருமனைக் குறைப்பதற்காக ஒரு சிறப்பு அறுவை சிகிச்சையினை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது.இந்த சிகிச்சை செய்யப்பட்டவர்கள் சிறிதளவு உணவை உண்டாலே முழு நிறைவு ஏற்பட்டு உடலில் உள்ள கொழுப்பு கரைய தொடங்கும்.இதில் 100 கிலோ வரை உடல் எடை குறைக்கப்பட்டவர்கள்  கூட இருக்கிறார்கள்.



நவீன மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்துவதிலும் ஆய்வகங்கள்,அறுவை சிகிச்சைகூடங்களை வடிவமைப்பதிலும் அதிக நுணுக்கமும் நுட்பமும் காட்டப்படுகிறது.சென்னையை சேர்ந்த பார்வதி மருத்துவமனை அண்மையில் "பிரைன் சூட்ஐசிடி " என்ற அதிநவீன அறுவை அரங்கத்தை நிறுவியுள்ளது. இங்கு மிக எளிதான முறையில் குறுகிய நேரத்தில் மூளை கட்டி அகற்றப்படுகிறது.  இதற்கான தொழில் நுட்பம் ஜெர்மனியை சேர்ந்த பிரைன் லேப் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்கிறார் மருத்துவமனையின் தலைவர் எஸ்.முத்துக்குமார்.

புதிய விசயங்களை ஈர்த்துகொள்வதில் சென்னைக்கு  மட்டும்தான் முதலிடம் என்பதில்லை.கோவையை சேர்ந்த கே.ஜி.மருத்துவமனை அண்மையில் " இ.சி.பி.தெரபி " என்ற சிகிச்சையை அங்கு அறிமுகம் செய்திருக்கிறது. இதய தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுதல்,இதய வீக்கம் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் இதன் மூலம் அறுவை சிகிச்சையின்றி சீரான இரத்த ஓட்டத்தைப் பெறமுடியும்.

ஆறு வாரங்களில் மொத்தம் 35 முறை நோயாளி மருத்துவமனைக்கு வர வேண்டியதிருக்கும்.அதுவே போதுமானது.கோவையில் மட்டும்  5 ஆயிரம் பேருக்கு இதய ரத்த குழாய் அடைப்பு பிரச்சினை இருக்கிறது என்கிறார் அம்மருத்துவமனையின் தலைவரும் பிரபல டாக்டருமான ஜி.பக்தவச்சலம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் புதுப்புது துறைகளிலும்,நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ மனைகள் அதிகரித்து வருகின்றன. சென்னை தி.நகரில் உள்ள ஆர்.எம்.டி.பெயின் அண்ட் பாலியோடிவ் மருத்துவமனையும் அது போன்றதுதான்." மருதுதுவர்களால் கைவிடப்பட்ட நோய் முற்றிப் போன நிலையில் உள்ள நோயாளிகள் இங்கு அழைத்து வரப்படுகிறார்கள்,

வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் அவர்களுக்கு அவர்களது நோயின் நிலை  குறித்தும் யதார்த்தமாக உணர வைப்போம்.மேலும் குறிப்பிட்ட நோயாளியின் இறுதிக்காலம் மனதளவிலும் உடல் அளவிலும் வலிமிகுந்ததாக இல்லாமல் இருக்க தேவையான சிகிச்சைகள், வலி நிவாரணிகள் ஆகியவற்றை அளிப்போம்.அவரது குடும்பத்தினருக்கும் தேவையான உளவியல் ஆலோசைனைகள் அளிக்கப்படும்.

மருத்துவத்தின் புதிய துறையாக இந்த "பாசியோடிவ் " துறை உருவாகியிருக்கிறது என்கிறார் அம்மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்.ரிபப்ளிகா ஸ்ரீதர். இத்துறை தொடர்பான மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு கடந்த மாதம் திருச்சியில் நடைபெற்றிப்பது வியப்பூட்டும் செய்தி.

இன்னும் வரும் ........................................

Source : IndiaToday  

2 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான தகவல்கள்.

நான் உங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

உங்கள் தளம் ஒரு மாணிக்க கல்.
இனி வழக்கமாக வருவேன்.