Pages

புதன், 21 அக்டோபர், 2009

சென்னை - சேலம் விமான சேவை


சேலம்: கிங் பிஷர் நிறுவனம், நவ., 15 முதல் சேலம் - சென்னை விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை, நேற்று துவங்கியது. சேலம் மற்றும் சுற்று வட்டார வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடைய நீண்டநாள் கோரிக்கையான, சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை நீண்ட இழுபறியாகவே இருந்து வந்தது.

என்.இ.பி.சி., நிறுவனத்தால் 1994ல் துவக்கப்பட்ட சேலம் - சென்னை விமான சேவை போதிய வரவேற்பு இல்லாததால், 45 நாட்களுக்குள் நிறுத்தப்பட்டது. ஏர் - டெக்கான் உள்ளிட்ட வேறு விமான நிறுவனங்கள் சேலத்திலிருந்து விமான சேவையை துவக்க தயக்கம் காட்டின. கடந்த 12 ஆண்டுகளுக்கு பின், கல்விநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் சேலத்தில் அதிகரித்து, முக்கிய நகரமாக உருவெடுத்த நிலையில், மேலும் முன்னேற்றத்துக்கு விமான சேவையும் கட்டாயம் என்ற நிலை உருவாகியது.

இந்நிலையில், சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை துவக்க, கிங் பிஷர் நிறுவனம் முன்வந்தது. கிங் பிஷர் நிறுவனத்தால் அக்., 25 ல் துவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட, சேலம்-சென்னை விமான சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதால், விமான சேவை சேலத்துக்கு இப்போதைக்கு கிடைக்கப்போவதில்லை என்ற ஏமாற்றம் வணிகர்களிடையே ஏற்பட்டது. தற்போது ஆன் - லைனில் கிங் பிஷர் நிறுவனம், "சேலம்-சென்னை' விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை நேற்றிலிருந்து துவங்கியது.

சேலத்திலிருந்து சென்னைக்கு 2, 877 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் நவம்பர் 15ம் தேதி முதல் விமான சேவை துவக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன் கூறியதாவது: மத்திய பாதுகாப்புத் துறை சார்பில், பயணிகள் போக்குவரத்துக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதற்காக, விமான சேவை சற்று ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபு படேலுடன் கலந்து பேசி, இதற்கான துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதனால், நவ., 1க்குள் பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், கிங் பிஷர் நிறுவனம் நவ., 15 முதல் சேலம்-சென்னை விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை நேற்று துவக்கியுள்ளது. விமான கட்டணமாக 2, 877 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை-சென்னை விமான கட்டணத்தை சேலம்-சென்னைக்கும் நிர்ணயித்துள் ளனர். இவற்றை சில மாதங்களுக்காவது 500 முதல் 600 ரூபாய் வரை குறைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளோம்.

மதியம் 2.50 மணிக்கு சென்னையில் கிளம்பி, மாலை 3.50க்கு சேலத்தை வந்தடையும் விமானம், பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் 4.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.20க்கு சென்னை சென்றடையும் வகையில் விமான சேவை அமைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு துவங்கிய முதல் நாளில் இரண்டு பேர் முன்பதிவு செய்துள்ளதாக கிங் பிஷர் நிறுவன பொதுமேலாளர் எல்ஸா டிசில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு மாரியப்பன் கூறினார்.

2 கருத்துகள்: